புத்தளம் கருவலகஸ்வவ, எரம்புதுகஸ்வௌ பகுதியில் உள்ள பாரிய பாறைக் கற்குழியொன்றுக்குள் வீழ்ந்த யானைக் குட்டி ஒன்றை நேற்று பாதுகாப்பாக மீட்டுள்ளதாக கருவலகஸ்வெவ வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த யானைக் குட்டி பிறந்து மூன்று மாதங்கள் நிறைவடைந்துள்ளதாகவும், அந்த யானைக் குட்டி குழிக்குள் வீழ்ந்து மூன்று நாட்களாக வெளியே வராமல் உள்ளேயே கிடந்ததாகவும் கருவலகஸவௌ வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

தப்போவ சரணாலயத்திற்கு அருகிலுள்ள எரம்புதுகஸ்வௌ பகுதியில் உள்ள பாரிய பாறை கற்குழி ஒன்றுக்குள் சிறிய யானைக்குட்டி ஒன்று வீழ்ந்து கிடப்பதாக, அப்பகுதியில் கால் நடைகளை மேய்க்கச் சென்ற நபர் ஒருவர் கருவலகஸ்வெவ வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளார்.

தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கருவலகஸவௌ வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் பாரிய குழிக்குள் வீழ்ந்த யானைக் குட்டியை பாதுகாப்பாக மீட்டு, கருவலகஸ்வெவ வனவிலங்கு அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

இவ்வாறு பாதுகாப்பாக மீட்கப்பட்ட யானைக் குட்டியை பரிசோதனை மற்றும் சிகிச்சை என்பவற்றுக்காக அனுராதபுரம் பன்டுலகம வனவிலங்கு அலுவலகத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாக கருவலகஸ்வெவ வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.