ஆர்.ராம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பை முன்னெடுப்பது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இரண்டாவது கடிதத்தினை அனுப்பி ஒருவாரமாகின்றபோதும் இன்னமும் ஜனாதிபதியிடத்திலிருந்து எவ்விதமான பதிலளிப்புக்களும் செய்யப்படவில்லை.

முன்னதாக, கடந்த ஜுன் மாதம் 16ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி செயலகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையிலான குழுவினர் சந்திப்பதற்கு ஏற்பாடாகியிருந்தபோதும் ஜனாதிபதியின் தரப்பினால் தவிர்க்க முடியாத காரணங்களை குறிப்பிட்டு அச்சந்திப்பு இரத்தாகியிருந்தது.

  

அதன்பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பை நடத்துவதற்கான திகதி மீள அறிவிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தரப்பிலிருந்து சம்பந்தனுக்கு எழுத்துமூலமாகவும், வாய்மொழிமூலமாகவும் தெரிவிக்கப்பட்டது.

  

எனினும் அதற்கான சமிக்ஞைகள் எதுவும் வெளிப்பட்டிருக்காத நிலையில் கடந்த 14ஆம் திகதி சம்பந்தன் மீண்டும் ஒரு கடிதத்தினை ஜனாதிபதி கோட்டாபயவுக்கு அனுப்பியிருந்தார். அதில் ஜனாதிபதியை சந்திப்பதற்கு கூட்டமைப்பு தயாராக இருக்கின்றது என்ற செய்தியை தெரிவித்ததுடன், அரசியலமைப்பு விடயங்கள் பற்றியே பேச்சுக்கள் தாமதப்படாது முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் உறுதிபடக் குறிப்பிட்டிருந்தார்.

  

இந்தக் கடிதம் அனுப்பட்டு ஒருவாரமாகியும் இன்னமும் ஜனாதிபதி தரப்பிலிருந்து எவ்விதமான பிரதிபலிப்புக்களும் செய்யப்படவில்லை. அதேபோன்று, அமெரிக்க தூதுவரின் இல்லத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.

  

இந்தச் சந்திப்பின் அடுத்தகட்டம் தொடர்பாகவும் இன்னமும் எவ்விதமான நகர்வுகளும் முன்னெடுக்கப்படவில்லை. சுமந்திரன், பீரிஸிடம் தெரிவித்த கருத்துக்கள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கு மட்டும் பரமாற்றப்பட்டுள்ளமை மட்டுமே தற்போதைக்கு உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.