ஆர்.ராம்

அமெரிக்காவுடன்  ஆபத்தான உடன்படிக்கைகளில் நிதி அமைச்சராக இருக்கும் பஷில் ராஜபக்ஷ கைச்சாத்திடலாம் என்ற அச்சம் எனக்கு இன்னமும் உள்ளது என்று லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும், பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர்.திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியின்போது இலங்கை, அமெரிக்க உறவுகள் பற்றி எழுப்பபட்ட வினாவொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

  

அவர் மேலும் தெரிவிக்கையில்,

  

இலங்கையின் நிதி அமைச்சராக பஷில் ராஜபக்ஷ இருக்கின்றார். இவருக்கு அமெரிக்க பிராஜாவுரிமையும் உள்ளது. இவர் பாராளுமன்ற உறுப்புரிமையைப் பெற்று முக்கிய தீர்மானங்கள் எடுக்கவல்ல நிதி அமைச்சுப்பொறுப்பினைப் பெற்றுக்கொண்டபோது நாம் கடுமையான எதிர்த்திருந்தோம்.

ஏனெனில், அமெரிக்காவின் பிரஜாவுரிமையைப் பெறும் ஒருவர் அந்த நாட்டின் நலன்களுக்கே முதலிடத்தினை அளிக்க வேண்டும் என்ற உறுதிமொழியின் பிரகாரம் எப்போதும் செயற்பட வேண்டியவராக காணப்படுகின்றார். அவ்வாறான நிலையில் நாட்டுக்கு பாதகத்தினை ஏற்படுத்தவல்லதும் ஏற்கனவே திட்டப்பட்டுள்ளதுமான எம்.சி.சி., சோபா உடன்படிக்கைகளை அடுத்துவரும் காலத்தில் கைச்சாத்திடுவதற்கு அமெரிக்கா முயற்சிக்கலாம்.

  

டியோ கார்சியா தீவை மீண்டும் மொரீசியஸிடம் ஒப்படைக்குமாறு சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது. இதனால் அமெரிக்கா அங்கிருந்து வெளியேறும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் நிலைபெற்றுக்கொள்வதற்காக இலங்கையை மையப்படுத்தி நடவடிக்கைகளை எடுத்திருந்தது.

  

கடந்த ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவுடன் அக்ஸா உடன்படிக்கையை கைச்சாத்திட்டது. அத்துடன் அதன் தொடர்ச்சியாக எம்.சி.சி., சோபா ஆகிய உடன்படிக்கைகளை கைச்சாத்திடுவதற்கும் திட்டமிட்டிருந்தது. இருப்பினும் 2019 நடைபெற்ற ஆட்சி மாற்றத்தினால் அவ்விதமான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டிருக்கவில்லை.

  

துரதிஷ்டவசமாக எம்.சி.சி.ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருக்குமாக இருந்தால் அமெரிக்காவின் பல்தேசிய நிறுவனங்கள் இலங்கையின் எப்பகுதியிலும் காணிகளைப் பெற்றுக்கொள்ளுமளவிற்கு அதிகாரங்களைப் பெற்றிருக்கும். தனித்துவச் சட்டங்களான தேசவழமை, கண்டியச் சட்டங்கள் அனைத்தும் செயலிழந்திருக்கும். புலமைச் சொத்துரிமையும் நீக்கம் பெற்றிருக்கும். அதன்மூலம் நாட்டின் பொருளாதாரம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு கட்டுப்பட்டதாகி இருக்கும்.

  

அதேபோன்று சோபா உடன்படிக்கை கைச்சாத்தியிருந்தால், அமெரிக்காவின் படைகள் எந்தவிதமான விசா அனுமதியும் இன்றி சீருடைகள் மற்றும் ஆயுதங்களுடன் விமான நிலையங்கள் ஊடாகவே அல்லது துறைமுகங்கள் ஊடாகவே நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கும், அவர்கள் நிலைபெறுவதற்கு திட்டமிட்டிருந்த திருகோணமலை இயற்கைத்துறைமுகத்திற்கு சென்று தங்கியிருப்பதற்குமான அதிகாரத்தினை வழங்குகின்றது. 

இவ்விதமான நிலைமைகள் ஏற்பட்டிருந்தால் எமது நாட்டினால் எதனையும் கட்டுப்படுத்த முடியாத நிலைமையே தோன்றியிருக்கும். ஆனால் எதிர்காலத்தில் இவை நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தினை மையப்படுத்தி உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டால் இவ்விதமான நிலைமைகள் தோற்றம் பெறலாம் என்ற அச்சம் என்னுள் இன்னமும் நீடிக்கின்றது என்றார்.