சீனா, பெய்ஜிங் நகரில் தற்போது சூழல் மாசடைந்துள்ளதால் சுத்தமான காற்று போத்தல்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவில், தொழில் துறை வளர்ந்து வருகிறது. அதே நேரத்தில் அங்கு தலைநகர் பெய்ஜிங் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வாகனங்கள், மின்உற்பத்தி நிலையங்கள் மூலமாக வெளியேறுகிற புகை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்லாது குளிர்காலத்தில் வீடுகளில் குளிர் காய்வதற்கு நிலக்கரி எரிப்பதால் வெளியேறுகிற புகையாலும் காற்றில் மாசு பெருகி வருகிறது.

இதுவரை இல்லாத அதிக அளவிலான பனி மூட்டத்தால் அங்கு பனிப் புகை ஏற்பட்டுள்ளது. 

பள்ளிகளில் வெளிப்புற நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

டிசம்பர் தொடக்கத்தில் சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு காற்று மாசு காரணமாக அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

இதனால் தலைநகரில் பள்ளிகள் மூடப்பட்டன. கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

மாசடைந்த காற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் சீன மக்கள் காற்றை விற்பனைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  

கனடா நாட்டில் உள்ள பான்ப் மற்றும் லேக் லூயிஸ் ஆகிய மலைகளிலிருந்து பெறப்பட்ட தூய்மையான காற்றை போத்தல்களில் அடைத்து விற்பனை செய்து வருகிறது கனடா நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று.

போத்தல் காற்று 5ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பான்ப் மலையின் காற்று இன்னும் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இந்த காற்று 10 மணி நேரம் வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.