உயிர்த்த ஞாயிறுதின தாக்குதலுக்கு நீதிகோரி கறுப்புக்கொடி போராட்டம்

21 Aug, 2021 | 01:11 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு முறையான விசாரணையை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கக்கோரியும்,   இது தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முறையாக செயற்படுத்தக் கோரியும், நாட்டில் தற்போது நிலவும் கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கக்கோரியும் இலங்கை கத்தோலிக்க திருச்சபையால் நாடு முழுவதும் கறுப்புக் கொடி ஏந்திய அமைதி வழிப் போராட்டம் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் சூழ்ச்சிகாரர்களையும் அதனுடன் தொடர்புபட்டவர்களையும் சட்டத்துக்கு முன் கொண்டு வந்து தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென்பதே பாதிக்கப்பட்டோர் எதிர்பார்த்துள்ளனர். 

இதற்காக அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுப்பதற்காகவே கறுப்புக் கொடி ஏந்திய அமைதி வழிப் போராட்டத்தை நடத்த தீர்மானித்ததாக கொழும்பு மறைமாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை சுட்டிக்காட்டியிருந்தார்.

2019 ஏப்ரல் 21 ஆம் திகதியான உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலம், நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி புனித செபஸ்தியார் கத்தோலிக்க தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் ‍கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளிட்ட தலைநகர் கொழும்பின் முன்னனி நட்சத்திர ஹோட்டல்களில் சஹ்ரான் தலைமையிலான குழுவினரால் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டதுடன் 270 வரையிலானோர் கொலை செய்யப்பட்டதுடன், பலர் அங்கவீனர்களாகவுமாயினர்.

மைத்திரி- ரணில் நல்லாட்சி அரசாங்க ஆட்சியின் கடைசி காலப்பகுதியின்போது நடத்தப்பட்ட  இந்த குண்டுத்தாக்குதலுக்கு பின்னரான ஜனாதிபதித் தேர்தலில் போது தற்போது ஜனாதிபதியாகவுள்ள கோட்டாபய ராஜபக்ச உயிர்த்த ஞாயிறு தின சூத்திரதாரிகளை கண்டுபிடித்து அவர்களை சட்டத்துக்கு முன் கொண்டுவந்து தண்டனை பெற்றுத் தருவதாக  கோட்டபய ராஜபக்ச கூறியிருந்தார். 

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான  விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை வந்து தற்போது 6 மாதங்கள் கடந்த நிலையிலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை அரசாங்கம் செயற்படுத்தாதிருப்பது மற்றும்  இந்த கோர சம்பவம் குறித்த தினத்தில் குறித்த நேரங்களில் நடத்தப்படும் என தகவல் அறிந்திருந்த அரச அதிகாரிகள் மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு  தற்போது பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளமை தமக்கும் கத்தோலிக்க மக்களுக்கும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை பல ஊடக சந்திப்புக்களில் கூறியிருந்தார்.

 "உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடத்திய திறைமறைவிலுள்ள சூழ்ச்சிக்காரர்களை அரசாங்கம் விசாரணை செய்யவோ அல்லது கைது செய்யவதற்கான சட்ட நடவடிக்கைகளை  இதுவரை செய்யவில்லை. அவர்கள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சூழ்ச்சியைப் போலவே, தற்போது இதனை மறைப்பதற்கான சூழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றதா என்ற சந்தேகம் எழுகிறது. ஆகவேதான், அரசாங்கத்துக்கு ஓர் அழுத்தத்தை பிரயோகித்து உண்மைத் தன்மையை வெளிப்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கக்கோரியும், கொரோனா நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கோரியும் இந்த கறுப்புக் கொடி ஏந்திய  அமைதிவழிப் போராட்டத்தை முன்னெடுக்கத் இலங்கை கத்தோலிக்க திருச்சபை தீர்மானித்தாக கர்தினால் அண்மைய ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார். இந்த கறுப்புக் கொடி  ஏந்திய அமைதிவழிப் போராட்டத்துக்காக இன ,மத, மொழியைக் கடந்து அனைவரும் ஒன்றிணையுமாறும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த தீர்மானத்துக்கு அமைவாக நாட்டின் சகல தேவாலயங்கள், வீடுகள் மற்றும் வாகனங்களில் இன்றைய தினம் (21) கறுப்புக் கொடிகள் ஏந்தப்பட்டிருந்ததுடன், உயிர்த்த ஞாயிறு தினத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் முகமாக சகல கத்தோலிக்க தேவாலயங்களிலும் காலை 8.45 மணிக்கு ஆலய மணியோசை எழுப்பப்பட்டது. மேலும், பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலம் மற்றும் கட்டுவப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் செப வழிபாடுகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன.

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட தேவாயலயங்களில் ஒன்றான கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் இன்று காலை 8.45 மணிக்கு மணியோசை எழுப்பப்பட்டதுடன், விசேட செப வழிபாட்டை ஆலய பரிபாலகர்களான அருட் தந்தை லலித் பெற்றிக் மற்றும் அருட் தந்தை கிஹான் டிலூஷ ஆகியோரால்   சுகாதார வழிமுறைகளை பின்பற்றி ஒப்புக்கொடுக்கப்பட்டது. இதன்போது, இறந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட பெயர் பலகைக்கு மலர் அஞ்சலி செய்யப்பட்து. இந்த நிகழ்வுக்கு ஆலய ஊழியர்களைத் தவிர பொது மக்கள் எவருக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

(படப்பிடிப்பு  : ஜே.சுஜீவ குமார் )

திருகோணமலையில் கறுப்புக்கொடி போராட்டம்

2019 .04. 21 ஆம் திகதிய உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ மக்களுக்கு எதுவித நீதியும் இதுவரை கிடைக்கவில்லை, உண்மையான சூத்திரதாரிகள் மறைக்கப் படுகிறார்கள், அக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப் பட வேண்டும், அவர்களே தண்டிக்கப் பட வேண்டும் என பல நிபந்தனைகளை முன்வைத்து கிறிஸ்தவ மேற் சபைகளினால் 2021.08.21ந் திகதி சனிக்கிழமை வீடுகள் தோறும் கறுப்புக் கொடிகளை ஏற்றி போராட்டத்தை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

முஸ்லிம் சமூகத்தின் எந்த சம்பந்தமும் இன்றி சஹ்ரான் என்ற கொலைகார கும்பலால் அரங்கேற்றப்பட்ட இந்தத் கொடூர தாக்குதலுக்கு அநியாயமாக குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்ட முஸ்லிம் சமூகமும் எமது போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தமைக்கு அமைவாக இன்று (21) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூதூர் தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளரும் கிண்ணியா நகர சபையின் உறுப்பினருமாகிய எம். எம். மஹ்தியினால் கிண்ணியாவில் கருப்புக் கொடிகள் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

 

கறுப்பு நிற ஆடை அணிந்து கொடியேற்றி பின்  அவர் வழங்கிய செவ்வியில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ சமூகத்திற்கும், அநியாயமாக குற்றவாளி கூண்டில் ஏற்றப்பட்ட முஸ்லிம் சமூகத்திற்கும், கைது செய்யப்பட்ட  தலைமைகளுக்கும் உரிய நீதி கிடைக்கப் பெற வேண்டும். உண்மையான சூத்திரதாரிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.  குற்றவாளிகளே தண்டிக்கப் பட வேண்டும். என்ற பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டத்திற்கு தாமும் ஒத்துழைப்பு வழங்குவதாக  அவர் கூறினார்.

கறுப்புக் கொடி ஏற்றினார் இரா .சாணக்கியன் 

ஏப்ரல் குண்டு தாக்குதல் இடம்பெற்று சுமார் 28 மாதங்கள் கடந்த நிலையில் இதுவரைக்கும் நீதி கிடைக்காத காரணத்தினால்  அனைத்து தேவாலயங்களிலும் கறுப்பு கொடி பறக்க விடுமாறு மால்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்து  இருந்தார்.

அந்த வகையில் இன்று காலை 10 மணியவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா .சாணக்கியன் தனது அலுவலகத்தில் கறப்பு கொடி ஏற்றி ஏப்ரல் தகுத்தலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கர்நாடகாவில் முத்தையா முரளிதரன் ரூ.1400 கோடி...

2024-06-22 00:34:31
news-image

பொசன் பண்டிகை தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண...

2024-06-22 00:19:19
news-image

யாழில் பதிவற்ற மோட்டார் வாகனம், வாளுடன்...

2024-06-22 00:12:34
news-image

யாழில் 2024 ம் ஆண்டுக்கான சர்வதேச...

2024-06-22 00:01:03
news-image

மன்னார் முருங்கன் பகுதியில் கோர விபத்து...

2024-06-21 23:56:18
news-image

வைத்தியசாலை வீதி ஒரு வழிப்பாதையாக மாற்றம்!

2024-06-21 23:51:14
news-image

வங்குராேத்திலிருந்து நாடடை மீட்க அரசாங்கம் அனைத்து...

2024-06-21 21:45:12
news-image

ஜனாதிபதியின் மன்னார் விஜயம் குறித்து மீனவர்கள்...

2024-06-21 21:44:00
news-image

நீண்ட நாட்களுக்கு பழுதடையாத செமன் பக்கற்...

2024-06-21 21:40:13
news-image

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த இருவர்...

2024-06-21 21:36:48
news-image

போதைப்பொருட்களுடன் 693 பேர் கைது !

2024-06-21 21:37:38
news-image

இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான திறன் மேம்பாட்டு...

2024-06-21 21:38:56