கொவிட் வைரஸுக்கு எதிரான இலங்கையின் போராட்டத்தில் உறுதியாக துணை நிற்போம் - இந்தியா

21 Aug, 2021 | 01:35 PM
image

(எம்.மனோசித்ரா)

திரவநிலை மருத்துவ ஒட்சிசனுடன் கடந்த வியாழனன்று விஷாகபட்டினத்திலிருந்து கொழும்பை நோக்கி புறப்பட்ட இந்திய கடற்படை கப்பல் கொழும்பை வந்தடைந்ததுள்ளதுடன் மிகுதி நாளை இலங்கை வந்தடையும் என்ற எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், கொவிட் வைரஸ் தொற்றுக்கு எதிரான இலங்கையின் போராட்டதில் உறுதியாக துணை நிற்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Image

 இதற்கு மேலதிகமாக 140 தொன்கள் நிறையுடைய திரவநிலை மருத்துவ ஒட்சிசன் சென்னை மற்றும் ஹால்டியா ஆகிய துறைமுகங்களிலிருந்து அடுத்தவாரம் கொழும்பை வந்தடையுமெனவும் எதிர்பார்ப்பதாகவும் இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

 இது குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : 

Image

கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் இலங்கைக்கு ஆதரவாக செயற்படும் இந்தியாவின் உறுதிப்பாட்டின்கீழ் இந்தியக் கடற்படை கப்பலான சக்தி நூறு தொன்கள் (5 கொள்கலன்கள்) நிறையுடைய திரவநிலை மருத்துவ ஒட்சிசனுடன் கடந்த வியாழனன்று விஷாகபட்டினத்திலிருந்து கொழும்பை நோக்கி புறப்பட்டுள்ளது.

திரவநிலை மருத்துவ ஒட்சிசனுக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக சமுத்திரசேது 2 நடவடிக்கையின் கீழ் இந்திய கடற்படை கப்பல் சக்தி இப்பணியில் ஈடுபட்டுள்ளது. 

இக்கப்பல் நாளை ஞாயிற்றுக்கிழமை கொழும்பை வந்தடையுமென எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவி;த்துள்ளது.

Image

இந்திய கடற்படைக்கப்பல் சக்தி தனது பயணத்தினை ஆரம்பித்திருந்த சமநேரத்தில் 40 தொன்கள் நிறையுடைய திரவநிலை மருத்துவ ஒட்சிசனுடன்  இலங்கை கடற்படையின் கப்பலான சக்தியும் சென்னையிலிருந்து கொழும்பை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்திருந்த நிலையில், அது நேற்று மாலை இலங்கையை வந்தடைந்தது இரு நாடுகளினதும் பல்வேறு துறைகளுக்கும் இரு தரப்பு கடற்படையினருக்கும் இடையிலான தோழமை மற்றும் பிணைப்பினை வெளிக்காட்டுகின்றது.

பொதுவான ஒரு நோக்கத்துடன் சக்தி என்ற பெயருடைய இவ்விரு கப்பல்களும் இந்தியாவின் இருவேறு பகுதிகளிலிருந்து ஒரு பயண முடிவிடத்தை நோக்கி தமது பிரயாணத்தை ஆரம்பித்திருக்கின்றமை மிகவும் அரிதான சம்பவமாக கருதப்படுகின்றது. 

Image

இதற்கு மேலதிகமாக 140 தொன்கள் நிறையுடைய திரவநிலை மருத்துவ ஒட்சிசன் சென்னை மற்றும் ஹால்டியா ஆகிய துறைமுகங்களிலிருந்து அடுத்தவாரம் கொழும்பை வந்தடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

திரவநிலை  மருத்துவ ஒட்சிசன் அடங்கிய கொள்கலன்கள் மற்றும் ஏனைய மருத்துவ சாதனங்களை பல்வேறு நாடுகளுக்கு உடனடியாக விநியோகிப்பதற்காக இந்திய கடற்படையால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கையே சமுத்திர சேது-2 என அழைக்கப்படுகிறது. 

இதுபோன்ற திட்டங்களுக்காக முன்னர் ஏழு இந்திய கடற்படை கப்பல்கள் பணியில் அமர்த்தப்பட்டிருந்தன. 

Image

கடந்த வருடம் இந்தியாவிலும் இலங்கையிலும் சிக்கியிருந்த மக்கள் சமுத்திரசேது நடவடிக்கையின் கீழ் இந்திய கடற்படை கப்பல் ஜலஸ்வா மூலமாக சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டமை இந்த சந்தர்ப்பத்தில் நினைவில் கொள்ளப்படவேண்டிய ஒன்றாகும்.

பெருநோய்த்தொற்று ஏற்பட்டிருக்கும் காலப்பகுதியில் தேவையின் அடிப்படையில் இந்தியா இலங்கைக்கான உதவிகளை வழங்கி வந்துள்ளது. 

Image

2020 ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களில் கிட்டத்தட்ட 26 தொன்கள் மருத்துவ உதவிப்பொருட்கள் அன்பளிப்பு செய்யப்பட்டிருந்தன.  

2020 ஜூலையில் 400 மில்லியன் அமெரிக்க டொலர் பரஸ்பர நாணய பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

அத்துடன் 2021 ஜனவரியில் இந்தியா அன்பளிப்பாக வழங்கியிருந்த முதற்தொகுதி தடுப்பூசிகள் காரணமாக இலங்கை அரசாங்கம் திட்டமிட்டிருந்த காலப்பகுதிக்கு முன்னதாகவே தடுப்பூசி வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பிக்க முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

Image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right