இலங்கையில் பெண்களுக்கான குறுந்தூர ஓட்டத்தில் இளைய நட்சத்திரமாக முன்னேறிவரும் மேதானி ஜயமான்ன, நைரோபியில் நடைபெற்றுவரும் 20 வயதுக்குட்பட்ட உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான 200 மீற்றர் அரை இறுதிப் ஓட்டப் போட்டியில் 23.95 செக்கன்கள் என்ற நேரப்பெறுதியைப் பதிவு செய்தார்.

பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் இது அவரது தனிப்பட்ட அதிசிறந்த நேரப் பெறுதியாகப் பதிவான போதிலும் இறுதிப் போட்டிக்கான தகுதியைப் பெறத்தவறினார். 

நேற்றுக் காலை நடைபெற்ற 5 முதல்சுற்று தகுதிகாண்களில் 2ஆவது போட்டியில் பங்குபற்றிய 18 வயதான மேதானி 24.01 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து 4ஆவது இடத்தைப் பெற்று அரை இறுதிக்கு நேரடித் தகுதியைப் பெற்றிருந்தார்.

நேற்று இரவு நடைபெற்ற அரை இறுதியில் அவர் சிறந்த நேரப் பெறுதியைப் பதிவு செய்த போதிலும் 24 வீராங்கனைகள் பங்குபற்றிய அரை இறுதியில் ஒட்டுமொத்த நிலையில் 13ஆவது இடத்தைப் பெற்றார்.

மேதானியினால் பதிவுசெய்யப்பட்ட 23.95 செக்கன்களானது 2018க்குப் பின்னர் இலங்கை வீராங்கனை ஒருவரால் 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் பதிவுசெய்யப்பட்ட அதிசிறந்த நேரப்பெறுதியாகும். அத்துடன் கனிஷ்ட பிரிவில் சுசன்திகா ஜயசிங்க, தமயந்தி தர்ஷா ஆகியோருக்கு அடுத்ததாக பதிவான 3ஆவது அதிசிறந்த நேரப் பெறுதி இதுவாகும்.

இது இவ்வாறிருக்க, நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 800 மீற்றர் அரை இறுதிச் சுற்றுக்கு தெரிவான 17 வயதான தருஷி கருணாரட்ன, 2ஆவது அரை இறுதியில் 2 நிமிடங்கள் 17.82 செக்கன்களில் கடைசி இடத்தைப் பெற்றார். இரண்டு அரை இறுதிகளுக்குமான ஒட்டுமொத்த நிலையில் அவர் கடைசி இடமான 16ஆவது இடத்தையே பெற்றார்.

இதற்கு முன்னோடியாக நடைபெற்ற தகுதிகாண் சுற்றில் தருஷி 2 நிமிடங்கள் 10.07 செக்கன்கள் என்ற நேரப் பெறுதியுடன் 4ஆம் இடத்தைப் பெற்றார். அப்போட்டியில் கியூப வீராங்கனை தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் தருஷி 3ஆம் இடத்தைப் பெற்று அரை இறுதிக்கு நேரடி தகுதிபெற்றிருந்தார்.