வட  மாகாணத்தின் அபிவிருத்தியில் ஏற்பட்டுள்ள தடையை நிவர்த்தி செய்ய  விரைவில் உரிய தரப்புடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபடுவேன். அரசாங்கத்தின் கீழுள்ள திணைக்களங்கள் அபிவிருத்திக்குத் தடையை ஏற்படுத்தவேண்டிய தேவை இல்லை. இவ்விடயத்தில் கவனம் செலுத்தப்படும் என  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்தார். 

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை இன்று மேற்கொண்ட ஜனாதிபதி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200 ஆம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற தபால் தலை வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு லும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

வடமாகாண முதலமைச்சர்  வடக்கில் காணப்படும் அபிவிருத்தித் தடைகள் பற்றிக் கூறியிருந்தார்.

எனினும் நாம் கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம் போன்றவற்றிற்கு  முன்னுரிமை வழங்கி வருகின்றோம். ஆனால் பணம் ஒதுக்கப்பட்டாலும் இருக்கக்கூடிய சில வளங்களின் குறைபாடுகளால் அபிவிருத்தி வேலைகள் தடைப்படுகின்றன. முதலமைச்சரால் சுட்டிக்காட்டப்பட்ட இரணைமடு குளமானது வடக்கு மாகாண மக்களுடைய பெரிய சொத்து. இந்நிலையில் இரணைமடுக் குளம் மட்டுமன்றி இங்குள்ள எல்லா நீர்ப்பாசனத்திட்டங்களுக்குமான அபிவிருத்தியில் கவனம் செலுத்தப்படும். 

வட  மாகாண மக்கள் விவசாயத்தில் பரீட்சயமானவர்கள். பல குறைபாடுகள், தடைகள் இருந்தாலும் இங்குள்ள விவசாயிகள் இந்த நாட்டுக்கு நல்ல உணவுகளை வழங்குகிறார்கள். 

முதலமைச்சர் கூறிய விடயங்களை நான்  மனதில் பதித்துள்ளேன். இந்நிலையில் வடக்கு மாகாணம், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்ற அபிவிருத்தி குறைபாடுகள், தேக்க நிலைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்துத் திணைக்கள உத்தியோகத்தர்களை அழைத்து விசேட கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளேன். இத்தகைய கலந்துரையாடல்கள் வெகு விரைவில் இப்பகுதியில் இடம்பெறும். 

எனவே இந்த அரசாங்கத்தின் கீழுள்ள திணைக்களங்கள் அபிவிருத்திக்குத் தடையை ஏற்படுத்தவேண்டிய தேவை இல்லை. இவ்விடயத்தில் கவனம் செலுத்தப்படும். அபிவிருத்தி தாமதமானால் வறுமையும்  ஏழ்மையும் அதிகரித்துக் கொண்டே போகும். அனைவரும் ஒன்று சேர்ந்து வறுமைக்கும் ஏழ்மைக்கும் எதிராக போராடவேண்டும்.  அது துப்பாக்கிகள் மூலமோ வேட்டுக்கள் மூலமாகவோ அல்ல. மாறாக அபிவிருத்திக்குத் தேவையானவற்றைக் கொண்டு அத்தகைய ஏழ்மை நிலையை மாற்றவேண்டும். வடமாகாணத்தின் அபிவிருத்திக்குக் காலதாமதம் இருந்தால் அதனை நிவர்த்தி செய்ய  துரிதமாக செயற்படுவேன்   என்றார்.