(ப.பன்னீர்செல்வம்இஆர்.ராம்)

ஊவா மாகாண முதலமைச்சருக்கு எதிரான வழக்கில் அவரின்  சார்பாக   மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் ஆஜராகிவருவதால் முதலமைச்சரின் ஊழல்மோசடிகளை மூடிமறைப்பதற்கு அமைச்சர் முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சமிந்த விஜேசிறி சபையில் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

 இச்சமயத்தில் அமைச்சருக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்குமிடையில் தர்க்கம் ஏற்பட்ட நிலையில்   பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சபையில் அமர்ந்திருந்தார். 

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாய்மூலமாக கேள்வி நேரத்தின்போது ஊவா மாகாண முதலமைச்சரின் நிதி மோசடிகள் குறித்து ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சமிந்த விஜேசிறி மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சரிடத்தில் கேள்வியெழுப்பினார்.

மாகாண பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப் பைகளை வழங்குவதற்கு வங்கிகளிடம் பெற்ற 35இலட்சம் ரூபா பணத்தை தனது பெயரிலுள்ள மன்றக்கணக்கில் வைப்பிட்டுள்ளார். இதனை தனியார்  தொலைக்காட்சியொன்றின் விவாத நிகழ்ச்சியொன்றில்  கலந்துகொண்டபோது ஒப்புக்கொண்டுள்ளார். ஆகவே அது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்னவென அமைச்சரிடத்தில் கேள்வியெழுப்பினார். 

இதற்குப் பதிலளித்த அமைச்சர் பைசர் முஸ்தபா, நீங்கள் எப்போதும் ஊவா மாகாண முதலமைச்சரை குற்றம் சாட்டியே வினாக்களைக் கேட்கின்றீர்கள். ஆதாரம் இல்லாது குற்றம்சாட்டாதீர்கள். நீங்களும் அந்த மாகாணத்தினைச் சேர்ந்தவர் என்பதால் அவரை வீட்டில் சந்தித்து பிரச்சினையை தீர்த்துக்கொள்ளுங்கள் என்றார். 

இதன்போது சமிந்த விஜேசிறி எம்.பி, ஊவா மாகாண முதலமைச்சரின் வழக்கொன்றில் நீங்கள் (அமைச்சர் பைஸர் முஸ்தாபா) அவரின் சார்பில் சட்டத்தரணியாகவுள்ளீர்கள். அதனால் தான் அவரின் நிதி முறைகேடுளை மூடி மறைக்கப் பார்க்கின்றீர்கள். ஆதாரம் இல்லாது நான் எதனையும் கூறவில்லை என்றார். 

இதன்போது  அமைச்சர் பைஸர் முஸ்தபா நான் முதலமைச்சரின் வழக்கு  தொடர்பாக சட்டத்தரணியாக இருக்கின்றேன். ஆனால் அதற்கும் இதற்கும் எந்த தொடர்புமில்லை. நீங்கள் எப்போதும் ஊவா மாகாண முதலமைச்சரை குற்றம் சாட்டுவதிலேயே குறியாக இருக்கின்றீர்கள் எனப்பதிலளித்தார். 

இதனால் பரஸ்பர தர்க்கம் ஆரம்பமானது. 

இந்நிலையில் எழுந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கேள்விகேட்கும் உரிமையுள்ளது. ஆனால் அமைச்சர் அந்தஸ்துள்ள ஒருவர் மீது குற்றம் சாட்டுவதானல் ஆதாரங்களுடனேயே குற்றம் சாட்டவேண்டும். அதேபோன்று பதிலளிக்கும் அமைச்சரும் கேள்விகளுக்கு மட்டும் பதிலளிப்பதே நல்லது என்றார். 

இதன்போது எழுந்த எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும், ஜே.வி.பியின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க எம்.பி, ஊவா மாகாண முதலமைச்சரின் நிதி முறைகேடுகள் தொடர்பில் எனக்கும் தெரியும். பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பைகளை வழங்கவென தனது உத்தியோக பூர்வ முதலமைச்சர் கடித தலைப்பிலேயே அவர் வங்கிகளிடத்தில் நிதியுதவிகளை கோரியுள்ளார். 

இதற்கமைய கிடைத்த 35இலட்சம் ரூபா தனது பெயரிலுள்ள தனிப்பட்ட மன்றக்கணக்கில் வைப்பிலிட்டது தவறு தானே? இதனை சமிந்த விஜேசேகர எம்.பி கேட்டால் ஊவா மாகாண முதலமைச்சரை வீட்டில் சந்தித்து பிரச்சினையை பேசித்தீருங்கள் என அமைச்சர் பதிலளிக்கின்றார். அதற்கான அர்த்தம் என்ன? வீட்டில் போய் பேசி தீருங்கள் என்றால் 35 இலட்சம் ருபாவை இரண்டாக பங்கிட்டுக் கொள்ளுங்கள் என்றா அமைச்சர் கூறுகின்றார். எனக்கேள்வியெழுப்பினார். 

இதனைத்தொடர்ந்து பதிலளித்த அமைச்சர் ஊவா மாகாண முதலமைச்சர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. அதேவேளை ஊவா மாகாண சபைக்குரிய நிதியை முதலமைச்சர் தனது பெயரிலுள்ள மன்றக்கணக்கில் வைப்பிலிட்டிருந்தால் தவறுதான். நான் இங்கு மாகாண சபை எனக்கு அனுப்பிய பதிலின் அடிப்படையிலேயே உங்களின் வினாவுக்குரிய பதிலை வழங்குகின்றறேன். உங்களுடைய குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய்ந்து பார்க்கின்றேன் என்றார்.