இராஜதுரை ஹஷான்

பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும்   சகல அரச ஊழியர்களும் தங்களின் மாத சம்பளத்தில் ஒரு பகுதியை நன்கொடையாக வழங்க இணக்கம் தெரிவித்தால் மாத்திரமே நாட்டை   முழுமையாக முடக்க முடியும்.

நாட்டை முடக்கினால்  நடுத்தர மக்களுக்கும், குறை வருமானம்  பெறுபவர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு என  சுதேச வைத்திய முறைமைகள் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத  வைத்தியசாலை அபிவிருத்தி மற்றும்  சமூக சுகாதார சேவைகள் இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார்.

களுத்துறையில்  இடம்  பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

  கொவிட் தாக்கத்தினை கருத்திற் கொண்டு நாட்டை  வார கணக்கில் முழுமையாக மூடுமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்கள். சுகாதார காரணிகளை கருத்திற் கொண்டு நாட்டை முடக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.  ஆனால் பொருளாதார  மட்டத்தில் ஏற்படும் சிக்கல் நிலை குறித்து எவரும்  கருத்துரைக்கவில்லை.

 பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் அனைத்து அரச ஊழியர்களும் தங்களின் மாத சம்பளத்தின் ஒரு பகுதியை நன்கொடையாக வழங்க இணக்கம் தெரிவித்தால். நாட்டை தாராளமாக மூடலாம். ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தினால் குறைந்த வருமானம் பெறுபரும் நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இத்தகைய நன்கொடைகளால் சேமிக்கப்படும் பணத்தை  நாட்கூலி பெறும் சுமார் 80 இலட்சம் மக்களுக்கு நிவாரண அடிப்படையில் வழங்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.