அதிபர் - ஆசிரியர் சம்பள முரண்பாட்டுக்கான தீர்விற்காக ஜனாதிபதி கரிசனையுடன் செயற்படுகின்றார். 

அமைச்சரவை உபகுழு அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு குறித்த அறிக்கையை நிதியமைச்சிடம் சமர்ப்பித்தவுடன் ஒரு வார காலத்திற்குள் பிரச்சினையை தீர்த்துவைக்க முடியும் என உறுதியளித்துள்ளதாக தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பாலசேகரம் தெரிவித்துள்ளார்.

அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவுடனான சந்திப்பு குறித்து கருத்து வெளியிடும்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அமைச்சர்களாக விமல் வீரவன்ச, டலஸ் அழகபெரும, பிரசன்ன ரணதுங்க மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் அடங்கிய அமைச்சரவை உபகுழுவை சந்தித்து கலந்துரையாடினோம்.

இதன் போது, 'ஆசிரியர்கள் எதிர்நோக்குகின்ற சம்பள முரண்பாடுகள் தொடர்பாக நாம் அறிவோம். எனவே ஆசிரியர்களின் கோரிக்கை நியாயமானது.

அதனை நிச்சயம் வழங் வேண்டும் என்பதில் நாமும் உறுதியாக இருப்பதோடு  ஜனாதிபதியும் இவ்விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக' அமைச்சரவை உபகுழுவினர் தெரிவித்தனர்.

மேலும் ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய நியமிக்கப்பட்டுள்ள இக்குழு ஆசிரியர் சங்கங்களுடைய கோரிக்கைகளைக் கேட்டறிந்து, நிதி அமைச்சிற்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்கும் என்றும், எதிர்வரும் ஒருவார காலப்பகுதிக்குள் பிரச்சினையை முழுமையாக தீர்க்கும் என்றும் குறிப்பிட்டது. 

அத்தோடு 24 வருடங்களாக நிலவும் சம்பள முரண்பாடானது தற்போதுள்ள அரசாங்கத்தினால் தீர்த்துவைக்கப்படும் என்ற வாக்குறுதியையும் இக்குழுவினர் எமக்கு வழங்கினர்.

அதேநேரம் மேலும் பல விசேடமான அம்சங்களையும் நாம் அமைச்சரவையின் உபகுழுவின் கவனத்திற்கு கொண்டுவந்தோம். 

அதாவது ஆசிரியர்களின் சம்பள நிலுவை கடந்த 15, 20 வருடங்களாக வழங்கப்படாமல் உள்ளது. அதற்கான நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டு ஆசிரியர்களுக்கான சம்பள நிலுவையை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டோம்.

அதற்கமைய அமைச்சரவை உபகுழுவினர் சம்பள நிலுவையை வழங்குவதற்கு நாம் பரிந்துரைசெய்கின்றோம் எனக் குறிப்பிட்டனர். 

மேலும், உதவி ஆசிரியர்களுக்கு 10,000 ரூபா சம்பளம் பெற்றுத்தர வலியுறுத்தியதோடு , அவர்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் தொடர்பிலும் சுட்டிக்காட்டினோம். 

அவர்களது ஏனைய பிரச்சினைகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தினோம். அவற்றுக்கான தீர்வைப் பெற்றுத்தருவதாகவும் அமைச்சரவை உப குழு எம்மிடம் தெரிவித்தது.

அதிபர் - ஆசிரியர் சம்பள முரண்பாட்டுக்கான தீர்விற்காக ஜனாதிபதி கரிசனையுடன் செயற்படுவதாகவும் அமைச்சரவை உபகுழு நிதியமைச்சிடம் அறிக்கையை சமர்ப்பித்தவுடன் ஒரு வார காலத்திற்குள் பிரச்சினையை தீர்த்துவைக்க முடியும் என உறுதியளித்தனர்.

நாமும் எதிர்பார்போடும் நம்பிக்கையோடும் காத்திருக்கின்றோம்.

 ஜனாதிபதியும், பிரதமரும், நிதி அமைச்சும், அமைச்சரவை உபகுழுவும் இணைந்து அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பாகும். 

அத்தோடு மீண்டும் மாணவர்களுக்கான நிகழ்நிலை கற்றல் கற்பித்தல் வழமைக்கு திரும்ப வேண்டும் என எதிர்பார்ப்போடும் நம்பிக்கையோடும் காத்திருக்கின்றோம் என்றார்.