பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து  போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த குற்றச்சாட்டின் பேரில் தேடப்பட்டுவந்த பிரபல போதைப்பொருள் வியாபாரிகள் இரண்டு பேர் முச்சக்கரவண்டியுடன் இன்று (20) கல்குடா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு கல்குடா - பிறைந்துறைச்சேனைப் பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்ட இவர்களிடமிருந்து ஹெரொயின் போதைப்பொருள் பொதிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

கல்குடா பொலிஸ் பிரிவின் சில பகுதிகளில் அண்மைக்காலமாக  ஒரு குழுவினர் மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவருவதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதுகுறித்து பொலிஸார் தேடுதலில் ஈடுபட்டுவந்த நிலையில் இவர்கள் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் போதைப்பொருள் விற்பனையாளர்கள் என்ற ஓர் அமைப்பாக செயற்பட்டுவருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், ஆகியோரின் வழிகாட்டலில் கல்குடா பொலிஸ் பிரிவில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.