மோட்டார் சைக்கிள் ஒன்றில் ஜெசி மற்றும் இயந்திர (என்ஜின்) இலக்கத்தை போலியாக மாற்றியமைத்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேக நபர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை நீர்கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பொலிஸ் நிலைய குற்றவியல் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று வியாழக்கிழமை (19) குரன பகுதியில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை பரிசோதனை செய்தனர்.

இதன்போது குறித்த மோட்டார் சைக்கிளின் ஜெசி மற்றும் இயந்திர (என்ஜின்) இலக்கம் அழிக்கப்பட்டு, போலியான ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளமையை அவதானித்த பொலிஸார், குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த 28 வயதுடைய இளைஞர் ஒருவரை சந்தேகத்தில் கைது செய்ததுடன், அவர் பயணித்த மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட குறித்த இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையின் போது, ஜெசி மற்றும் என்ஜின் இலக்கம் அழிக்கப்பட்டு, போலி ஆவணம் தயாரிக்கப்பட்ட மேலும் ஒரு மோட்டார் சைக்கிலும், அதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.