(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தீவிரமடைதற்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவும், அனுர குமார திஸாநாயக்கவும் பொறுப்பு கூற வேண்டும்.

குறுகிய அரசியல் நோக்கத்திற்காக மக்களை வீதிக்கிறக்கியவர்கள் இன்று மக்களை வீட்டுக்குள் இருக்குமாறு குறிப்பிடுகிறார்கள்.

தற்போதைய  நெருக்கடியான நிலையை அரசாங்கம் சிறந்த முறையில் வெற்றிகொள்ளும் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

மஹிந்தானந்த அளுத்கமகே மீது வழக்குத் தாக்கல் | Virakesari.lk

 

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட் தாக்கத்தின் காரணமாக சுற்றுலாத்துறை வீழ்ச்தியடைந்துள்ளன. வெளிநாட்டு முதலீடுகளும் குறைவடைந்துள்ளன.

இதனால் தேசிய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அரசாங்கம் மக்களுக்கான சேவையை குறைவின்றி நிறைவேற்றியுள்ளது. கடந்த மாதம் 16 ஆம் திகதி இலங்கையில்  டெல்டா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. டெல்டா வைரஸ் தொற்று   தீவிரமாக பரவலடையும் என வைத்தியர்கள் எதிர்வு கூறினார்கள். 

வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம்   பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளபோது  ஐக்கிய மக்கள் சக்தியினர் பாராளுமன்ற சுற்றுவட்டத்தில்  போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

டெல்டா வைரஸ்  தொற்று அடையாளம் காணப்பட்ட வேளையிலிருந்து எதிர்க்கட்சியினர் ஒரு இலட்சத்து 6 ஆயிரம் மக்களை ஒன்றிணைத்து நாடு தழுவிய ரீதியில் 847 போராட்டங்களில் ஈடுப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்க்கட்சியினரும், மக்கள் விடுதலை முன்னணியினரும் தலைமை தாங்கினார்கள்.

வைரஸ் தொற்றை தீவிரமடைய செய்து விட்டு தற்போது நாட்டை மூடுங்கள் ,மக்களை வீட்டுக்குள் இருங்கள் என்று குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.

ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது இலகு ஆனால்   பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். தற்போதைய நெருக்கடியான நிலையை அரசாங்கம் சிறந்த முறையில் வெற்றி கொள்ளும் என்றார்.