இலங்கையில் இனங்களிடையே ஐக்கியத்தை ஏற்படுத்தி தேசிய நல்லிணக்கத்திற்கு உயிர் கொடுத்தது கட்சி ஐக்கிய தேசியக் கட்சியாகும்.  70ஆம் ஆண்டில் கால்பதிக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் நாட்டுக்கான மக்களுக்கான அர்ப்பணிப்பு தொடரும்  என்று  சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல   தெரிவித்தார். 

ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது வருடாந்த பூர்த்தி மற்றும் நாளை இடம்பெறுவுள்ள சம்மேளனம் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே சபை முதல்வரும், உயர்க்கல்வி,நெடுஞ்சாலைகள் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில், ஐக்கிய தேசிய கட்சி நாட்டுக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கட்சியாகும்.

அதேவேளை 70 வருடத்தை பூர்த்தி செய்யும் எமது கட்சி, அதனை அர்த்தமுள்ளதாக கொண்டாடுகிறது.

பௌத்த மத அனுஷ்டானங்கள், இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மத அனுஷ்டானங்களை நடத்தி மதங்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளது.

மறுபுறம் சிங்களம், தமிழ், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர் என அனைத்து இனத்தவர்களும் ஐ.தே.கட்சியில் அங்கத்துவத்தைப் பெற்றவர்கள்.

இனங்களிடையேயும் மதங்களிடையேயும் ஒற்றுமையை ஏற்படுத்தி தேசிய நல்லிணக்கத்திற்கு உயிரோட்டம் வழங்கிய ஒரே கட்சி  ஐக்கிய தேசிய கட்சியாகும் என்றார்.