ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இன்று இரவு நாட்டு மக்களுக்காக விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.

கொவிட்-19 நிலைமை, பொருளாதார நிலை மற்றும் நாட்டை முடக்குவது தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து ஜனாதிபதி இதன்போது தெளிவாக கூறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதியின் இந்த அறிவிப்புக்கு முன்னதாக இன்று காலை மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களில் தலைமை பீடாதிபதிகளை அழைத்து இலங்கையின் நிலைமையை தெரிவிக்க உள்ளார்.

இதேவேளை ஒருவார காலத்துக்கேனும் நாட்டை முடக்கி வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பொருத்தமான தீர்மானங்களை எடுக்குமாறு நேற்றைய தினம் அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்கள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பி வைத்தனர்.

மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் தீப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்க தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வராகொட தம்மசித்தி ஸ்ரீ பஞ்ஞானந்த தேரர் ஆகியோர் இணைந்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்,

கொவிட் அனர்த்தத்திலிருந்து மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளுக்கமைய ஒரு வார காலத்திற்கு நாட்டை முடக்கி, மக்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பொருத்தமான தீர்மானத்தை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

அதேநேரம் கொவிட்-19 வைரஸ் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. எனவே இவ்வாறான நெருக்கடிமிக்க நிலையில் நாட்டை மூன்று வாரங்களுக்கு முடக்க நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வசிக்கும் 10 பிரதான பங்காளிக் கட்சிகளும் கூட்டாக ஒன்றிணைந்து கடிதம் மூலம் ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.