மலையாளபுரத்தில் வீடு புகுந்த குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பல இலட்சம் பெறுமதியான உடமைகள் நாசம்

By J.G.Stephan

19 Aug, 2021 | 02:49 PM
image

கிளிநொச்சி மலையாளபுரத்தில் நேற்று (18.08.2021) இரவு 8:30 மணியளவில் வீடு ஒன்றினுள் புகுந்த இளைஞர் குழுவொன்று நடத்திய தாக்குதலில் பல இலட்சம் பெறுமதியான வீட்டு உடமைகள் நாசம் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று புதன் கிழமை 8:30 மணியளவில் மலையாளபுரம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பொருளாளரின் வீட்டுக்குள் நுழைவாயில் கதவினை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற ஐந்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் வீட்டின் கதவினையும் உடைத்து உள் நுழைந்து நடத்திய தாக்குதலில் குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சி, இரண்டு மோட்டார் சைக்கிள்கள், தளபாடங்கள், வீட்டின் ஜன்னல்கள்  உள்ளிட்ட சொத்துக்களை அடித்து நொருக்கியுள்ளனர்.


அத்தோடு குறித்த கும்பல் வீட்டிற்குள் நுழைவதனை அவதானித்த வீட்டின் உரிமையாளரான கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பொருளாளர் பின் வழியால் தப்பிச் சென்று விட்ட நிலையில் அவரது மகன் மீது தந்தையை கேட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். 

கிராம அபிவிருத்திச் சங்கத்திற்குச் சொந்தமான 80 அடி தகரப் பந்தல் ஒன்று  கிராம அபிவிருத்திச்சங்கத்தின் பொருளாளரின் பொறுப்பில் இருந்துள்ளது. அண்மையில் கிராமத்தில் நடந்த இரண்டு மரண வீடுகளுக்கும் அவர் அதனை 40 அடியாக பிரித்து இரண்டு வீடுகளுக்கும் வழங்கியுள்ளார். ஆனால் தங்களுக்கு 80 அடி பந்தலையும் வழங்கவில்லை எனத் தெரிவித்து ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே இத்தாக்குதல் இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட தரப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right