ஆப்கான் முன்னாள் ஜனாதிபதி அஷ்ரப்கனி மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கள் நாட்டில் உள்ளதாக ஐக்கிய அரபு இராச்சியம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

 ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச்சென்ற அஷ்ரப் கனி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஐக்கிய அரபு இராச்சியம் அடைக்கலம் கொடுத்துள்ளது.

மனிதாபிமான அடிப்படையில் அஷ்ரப்கனி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,ஐக்கிய அரபு இராச்சியத்தில் தஞ்சமடைந்துள்ள அஷ்ரப்கனி தனது சமூகவலைத்தள பக்கம் மூலம் காணொளி ஒன்றை வெளியிட்டு, கூறியதாவது,

எனது காலணிகளை கூட அணிய முடியாத  சூழ்நிலையில் நான் வெளியேற்றப்பட்டேன். உள்ளூர் மொழிபேசத்தெரியாவதவர்கள்  ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து என்னை தேடினர்.

இந்த நிகழ்வுகள் மிகவும் வேகமாக நடைபெற்றுவிட்டது. தலிபான்களை  உள்ளடக்கிய அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பாக கலந்து ஆலோசிக்க நான் எண்ணினேன். அரசின் முன்னாள் அதிகாரிகள் மற்றும் தலிபான்கள் இடையேயான பேச்சுவார்த்தைக்கு நான் ஆதரவு அளிக்கிறேன். நான் மீண்டும் ஆஃப்கான் திரும்புவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன்’ என்றார்.

இதேவேளை, ஆப்கானிஸ்தான்  ஜனாதிபதி அஷ்ரப் கனி அரசு பணத்தில் இருந்து 169 மில்லியன் டொலர் பணத்தை திருடிவிட்டார் என தஜிகிஸ்தான் நாட்டிற்கான ஆப்கானிஸ்தான் தூதர் முகமது ஜாகீர் அக்பர் குற்றஞ்சாட்டியுள்ளமையும் குறிப்பிடதக்கது.