நாட்டை முடக்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதாரபணி உதவியாளர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (18) முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா வைத்தியசாலை வளாகத்தில் இன்று மதியம் 12 மணியளவில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வைத்தியசாலையில் போதுமான அளவு ஒட்சியனை களஞ்சியப்படுத்து, கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஒருவாரத்திற்கு நாட்டினை முழுமையாக முடக்கு, சுகாதார துறை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து போன்ற வாசகங்கள் தாங்கிய பாதாதைகளை ஏந்தியிருந்தனர்.

குறித்த போராட்டத்தில் தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார பணி உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதேவேளை, நாட்டில் தற்போது கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் அதிகரித்து காணப்படுவதாலும், விசேட வைத்திய நிபுணர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து முழு நாட்டையும் 10 நாட்களுக்கு முடக்கக்கோரி சுகாதார தொழிற்சங்கம் ஒன்றிணைந்த அமைப்பினர் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி இன்றையதினம் கொழும்பு தேசிய வைத்தியசாலை முன்றலில்  போராட்டமொன்றையும் முன்னெடுத்திருந்தனர்.

(படங்கள் - ஜே.சுஜீவகுமார் )