(இராஜதுரை ஹஷான்)  
கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் உள்ள வர்த்தக சங்கத்தினர் கடைகளை மூடியுள்ளார்கள். கொழும்பு நகரில் உள்ள வர்த்தக சங்கத்தினர்களும்  இவ்வாறு கடைகளை மூடி, கொவிட் பரவலை தடுக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.  அரசாங்கத்தை நம்பி இனி பயனில்லை. அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். என  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கொழும்பு மாவட்ட மக்களிடம் வலியுறுத்தினார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள மரணங்களுக்கு அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும். கொவிட் தாக்கத்தை நியூசிலாந்து, தாய்வான் உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் கட்டுப்படுத்தியுள்ளன. இலங்கை ஒரு தீவாக இருந்தும் கொவிட் தாக்கத்தை கட்டுப்படுத்தவில்லை.

கொவிட் -19 வைரஸ் தொடர்பில் எதிர்க்கட்சியினர் ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்டதை அரசாங்கம் பொருட்படுத்தவில்லை. விமான நிலையத்தை திறந்து கொவிட் பரவலை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது.

 பிரதமர் அரசாங்கத்தில் இருக்கிறாரா, இல்லையா  என்பது தெரியவில்லை. ஜனாதிபதி பிரதமரை புறக்கணித்து தெரியாத விடயங்களை தெரிந்ததை போன்று செயற்படுத்துகிறார். இதனால் நாட்டு மக்களே பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

கொழும்பு நகரிலுள்ள வர்த்தக சங்கத்தினரும் இவ்வாறு தற்காலிகமாக கடைகளை மூடி தங்களின் பாதுகாப்பை  உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். தேசியத்தை பாதுகாக்க அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். ஆகவே கொவிட் பரவலை தடுக்க  வர்த்தக சங்கத்தினர்  கடைகளை மூடி, சுய பாதுகாப்பை  உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.