தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரும், தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநருமான திருமதி தமிழிசை சௌந்தரராஜனின் தாயார் இன்று காலை காலமானார்.

தெலுங்கானா மாநில ஆளுநராக பணியாற்றி வரும் திருமதி தமிழிசை சௌந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி (76) உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவரது உடல் ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது.

இதுதொடர்பாக திருமதி தமிழிசை சௌந்தரராஜன் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது...

'என்னை பார்த்து பார்த்து ஊட்டி வளர்த்த எனது தாயார் இன்று அதிகாலை என்னை விட்டு பிரிந்து சென்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்க்கையில் நீ எந்த அளவிற்கு உயர்ந்தாலும், ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யவே இறைவன் உன்னை படைத்தார்' என்று சொல்லி நல்லொழுக்கத்துடன் வாழ கற்றுக் கொடுத்தவர் எனது தாயார். 

என் தாயாரின் இறுதி ஆசைப்படி சென்னை சாலிகிராமத்தில் உள்ள எனது இல்லத்தில் இன்று மாலை 4 மணி அளவில் இறுதி அஞ்சலிக்காக என் தாயாரின் உடல் வைக்கப்பட்டு, நாளை உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை கண்ணீருடன் பகிர்கிறேன்' என தெரிவித்திருக்கிறார்.