(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )
உலக சுகாதார ஸ்தாபனத்துடன் நாம் நெருக்கமான நாடாக இருந்தும் அவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் உதவிகள் குறைவாகும். எனவே கொவிட் வைரஸ் நிலைமைகளை கையாள உலக சுகாதார ஸ்தாபனத்தை மேலும் நெருக்கமாக்கிக்கொள்ள வேண்டுமென முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன சபையில் தெரிவித்தார். உடனடியாக சர்வ கட்சி தலைவர்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்து ஜனாதிபதி கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அவர் மேலும் கூறுகையில், ஏனைய நாடுகள் பல கொவிட் வைரஸ் பரவலில் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் இன்று ஆரோக்கியமான கட்டத்தில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நிலையில் உள்ளனர். ஆனால் துரதிஷ்டவசமாக எமது நாடு மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றது. மணித்தியாலத்திற்கு ஐந்து அல்லது ஆறுபேர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி ஏற்றுவது மற்றும் பயணக்கட்டுப்பாடு விதிப்பதே பிரதான காரணிகள் என உலக சுகாதார ஸ்தாபனம் கூறி வருகின்றது. எமது நாட்டை பொறுத்தவரை 45 இலட்சத்துக்கு அண்ணளவான மக்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர். எனவே நாளாந்த மரணங்கள் மற்றும் தொற்றாளர் எண்ணிக்கை குறித்து நாம் சகலருக்கும் பொறுப்புடன் செயற்பட்ட வேண்டும். இந்தியா அமெரிக்கா போன்று நாமும் நிலைமைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு சகலரதும் ஒத்துழைப்பு அவசியம்.

உலக சுகாதார ஸ்தாபனம் எமது நாட்டுடன் நெருக்கமான அமைப்பாகும். தற்போது பெற்றுக்கொண்டு வரும் உதவிகளை விடவும் மேலும் அதிகமான ஒத்துழைப்புகளை அவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் என நான் நம்புகிறேன். சுகாதார அமைச்சராக செயற்பட்ட காலத்திலும், ஜனாதிபதியாக கடமையாற்றிய காலத்திலும் நான் நெருக்கமாக செயற்பட்டேன். ஆகவே இப்போது இருக்கும் நிலைமையை விடவும் மேலும் அதிகமாக அவர்களிடம் இருந்து ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.