(எம்.எம்.சில்வெஸ்டர்)

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் இருபதுக்கு 20 கிரிக்கெட்  தொடரில் தசுன் தலைமையிலான ஸ்ரீ லங்கா கிறேஸ் அணி, விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றியீட்டி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கடந்த 13 ஆம் திகதியன்று ஆரம்பமான 'எஸ்.எல்.சீ. இன்விடேஷனல்'  இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

கி‍றேஸ், ரெட்ஸ், கிரீன்ஸ், புளுஸ்  ஆகிய  4 அணிகள் பங்கேற்கும் இப்போட்டித் தொடரில் ஒவ்வொரு அணியும் ஏனைய அணிகளுடன் தலா இரண்டு முறை மோதிக்கொள்ளும். 

இதில் புள்ளிகள் பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் எதிர்வரும் 24 ஆம் திகதியன்று நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

மொத்தமாக 13 போட்டிகள் நடைபெறும் இத்தொடரில் 6 போட்டிகளின் நிறைவில்  நான்கு அணிகளும் தலா 3 போட்டிகளில் விளையாடியுள்ளன. 

இதில் தசுன் ஷானக்க தலைமையிலான கிறேஸ் அணி 3 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளிலும் வெற்றியீட்டி 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளதுடன், அஷான் பிரியன்ஜன் தலைமையிலான கிரீன்ஸ் அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாது கடை சி இடத்தில் உள்ளது. 

இரண்டாவது இடத்தில் தனஞ்சய டி சில்வா தலைமையிலான புளுஸ் அணி  2 போட்டிகளில் வெற்றியீட்டி 4 புள்ளிகளுடனும், தினேஷ்  சந்திமால் தலைமையிலான ரெட்ஸ் அணி ஒரு போட்டியில் மாத்திரம் வெற்றியீட்டி 2 புள்ளிகளை  பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.

இனிவரும் போட்டிகள் மிகவும் முக்கியமானவையாக  4 அணிகளுக்கும் அமையவுள்ளன. நிகர ஓட்ட வேகத்தில்  கிறேஸ் அணி சிறந்த நிலையில் உள்ளதால் ஒரு போட்டியில் வெற்றியீட்டினால்கூட இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும். புளுஸ் அணி  மூன்றில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும். 

எனினும், ரெட்ஸ் அணியை பொருத்தமட்டில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும்கூட, நிகர ஓட்ட வேகம் - 1.243 ஆக காணப்படுகின்றமை இறுதிப் போட்டிக்கு செல்வதற்கு  அணிக்கு கடினமாகவே இருக்கும். 

ஆகவே, நிகர ஓட்ட வேகத்‍தைக் காட்டிலும் எஞ்சியுள்ள 3  போட்டிகளிலும் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு இலகுவாக செல்லமுடியும். 

கடைசி இடத்திலுள்ள கிரீன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டுமாயின் சிறந்த ஓட்ட வேகத்துடன் சகல போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும்.

இப்போட்டித் தொடரில் நாளை தினம் பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகும் முதலாவது போட்டியில்  ரெட்ஸ் அணியும் புளுஸ் அணியும் மோதிக்கொள்வதுடன், இரவு  7 மணிக்கு ஆரம்பமாகும் போட்டியில் கிறேஸ் அணியும் கிரீன்ஸ் அணியும்  ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன.

துடுப்பாட்டத்தில் கமிந்து மெண்டிஸ் (193), தசுன் ஷானக்க (140), பெத்தும் நிஸ்ஸங்க(124), அஷேன் பண்டார (110), சதீர சமரவிக்ரம (108), அவிஷ்க பெர்னாண்டோ (97)  ஆகியோர் அதிக ஓட்டங்களை குவித்த வீரர்கள் வரிசையில் முதல் ஆறு இடங்களை வகிக்கின்றனர். 

பந்துவீச்சில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய முதல் ஆறு வீரர்கள் வரிசையில்  சீக்குகே பிரசன்ன(6), நுவன் பிரதீப் (5), புலின தரங்க (5), அஷேன் டெனியல் (4), சாமிக்க கருணாரட்ன (3), மஹீஷ் தீக்சன  (3) ஆகியோர் உள்ளனர்.