(எம்.எம்.சில்வெஸ்டர்)
இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபங்களை மீறி செயற்படும் வங்கிகள் மற்றும் லீசிங் நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய  இயக்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, 

கொவிட் 19 கொரோனா தொற்று அச்சுறுத்தலினால் பொது மக்கள் சிரமங்களுக்குள்ளாகியுள்ளதால் இலங்கை மத்திய வங்கியின் நிதி கட்டுப்பாட்டு பிரிவினால், லீசிங் நுகர்வோருக்கு நிவாரணமொன்று பெற்றுக்கொடுப்பதற்காக கடந்த மே மாதம்  சுற்று நிரூபங்கள் சில வெளியிடப்பட்டிருந்தன.

அந்த சுற்று நிரூபங்களின் படி 2021 ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு லீசிங் நுகர்வோரிடமிருந்து தாமதத்துக்கான  வட்டி  அறவிடல் மற்றும் வாகனங்களை கையகப்படுத்தல்  ஆகிவற்றை நிறுத்தும் படியும் பிரிதொரு  நிவாரணமொன்றை வழங்குவற்கான நடவடிக்கைகளை ‍ மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

எனினும், அந்த சுற்று நிரூபத்தை மீறி வங்கிகள் மற்றும் லீசிங் நிறுவனங்கள்  தாமதத்துக்கான வட்டி செலுத்தும்படி தமது நுகர்வோருக்கு எழுத்து மூல ஆவணங்களை அனுப்பி வைத்துள்ளனர். அவ்வாறு ஆவணங்களை அனுப்பி வைத்தது மட்டுமல்லாமல் சில லீசிங் நிறுவனங்கள் நுகர்வோரின் வாகனங்களையும் கையகப்படுத்தியுள்ளது.

எனினும், குறித்த சுற்றுநிருபத்தை வெளியிட்ட இலங்கை மத்திய வங்கியானது, தனது சுற்றுநிருபத்தை மீறிய வங்கிகள் மற்றும் லீசிங் நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் லீசிங் நுகர்வோர் பெரும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர். நுகர்வோர் சிரமத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில்  மத்திய வங்கி மெளனமாக இருப்பதை  நாம் வன்மையாக கண்டிப்பதுடன் குறித்த நிறுவனங்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கைளை எடுக்கும்படி நாம் மத்திய வங்கியிடம் கேட்டுக்கொள்கிறோம்.

இந்நாட்டு மக்களிடமிருந்து அறவிடப்படும் வரிகளின் மூலமாகவே மத்திய வங்கி அதிகாரிகள் சம்பளம் மற்றும்  உயர் படிப்புகளையும் பெற்றுக்கொள்கின்றனர். ஆகவே, மத்திய வங்கி அதிகாரிகளின் செயற்பாடுகளை விமர்சிப்பதற்கான பூரண உரிமை நாட்டு மக்களுக்கு உண்டு. மத்திய வங்கி அதிகாரிகள் பொது மக்களுக்கு நிவாரணமொன்றை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.