சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 277 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 54,889 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை மேல் மாகாணத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் நேற்றைய தினம் 946 வாகனங்களில் பயணித்த 2,049 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அவற்றில் 330 வாகனங்களில் பயணித்த 635 பேர் மாகாண எல்லைகளில் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

தனிமைப்படுத்தல் உத்தரவுகள் தொடர்பில் பொலிஸாரின் தெளிவூட்டல்

கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் நேற்று (16) முதல் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் பல நடைமுறைப்படுத்த இருப்பதாக பொலிஸார் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளனர்.

இதன்படி, இன்று முதல் பொதுமக்கள் ஒன்றுகூடுகின்ற எந்தவொரு வைபவங்களையோ அல்லது நிகழ்வுகளையோ நடத்த முடியாது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இன்று (17) நள்ளிரவு முதல் திருமண வைபவங்களை நடத்துவதற்கும் அனுமதி இல்லை. இருப்பினும், திருமணப் பதிவுகளை மேற்கொள்வதற்கு எந்த தடையும் இல்லை. திருமணப் பதிவை வீட்டிலோ அல்லது வேறு இடத்திலோ மேற்கொள்ளலாம் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்தத் திருமணப் பதிவுக்கு மணமகன், மணமகள், இரு தரப்பினரின் பெற்றோர், பதிவாளர் மற்றும் இரண்டு சாட்சியாளர்கள் மாத்திரமே கலந்து கொள்ள முடியும்.  அதைத் தவிர, வேறு யாருக்கும் இதில் பங்கேற்க வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, நேற்று (16) இரவு 10 மணி முதல் இன்று (17) அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை ஒவ்வொரு நாளும் நடைமுறையில் இருக்கும்.

இக்காலத்தினுள், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளவர்கள் மற்றும் அதற்கான வாகனங்கள் மாத்திரமே வீதிகளில் பயணிக்க முடியும். 

நெருங்கிய உறவினரின் இறுதிச்சடங்கு அல்லது மருத்துவ சிகிச்சைகளுக்காக  மாத்திரமே மாகாண எல்லைகளை கடக்க வாய்ப்பு கிடைக்கும். இதேவேளை, முகக் கவசம் அணியாதவர்களை கைது செய்வதற்காக இன்று முதல் நாடளாவிய ரீதியில் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.