(எம்.ஆர்.எம்.வசீம்)
2025ஆம் ஆண்டு எமது அரசின் காலம் நிறைவு பெறுவதற்கு முன்னர் அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதே எமது வாக்குறுதியாகும். அதற்கான வேலைத்திட்டாகவே வவுனியா நீர் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் வடக்கின் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

46.24 மில்லியன் ரூபாய் செலவில் வவுனியா மாவட்டத்தில் இரண்டு பிரதேச செயலகங்களில் குடிநீர் குழாய்களை வழங்கும் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், வவுனியா மாவட்டத்தில் 2 பிரதேச செயலகங்களின் கீழுள்ள வவுனியா நகரம் மற்றும் வவுனியா தெற்கு பிரிவுகளின் கார்தாசின் குளம், மகரம்ப குளம் மற்றும் மாமடுவ ஆகிய மூன்று கிராம சேவகர் பிரிவுகளில் குடிநீர் குழாய்களை பொருத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. 8.7 கிலோ மீற்றர் தூரத்திற்கு குடிநீர் குழாய் பொருத்துதல் மற்றும் புதிய இணைப்புக்களை வழங்குதல் என்பன இடம்பெறும். இதற்காக 46.24 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

வவுனியா நீர் திட்டத்திற்கு நீர் பெற்றுக் கொள்ளும் இடமாக சேராறு நீர் தேக்கம் காணப்படுகின்றது. வவுனியாவுக்கு குடிநீரை வழங்குவதற்கு இந்த நீர்த்தேக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. வவுனியாவுக்கு தேவையான குடிநீரை வழங்குவதற்கு நீர் பெற்றுக்கொள்ளும் வளங்கள் போதுமானளவு காணப்படுகின்றன. புதிய குழாய்களைப் பொருத்தி அனைவருக்கும் குடிநீர் வழங்குவது எமது வேலைத் திட்டமாகும். அதற்காகத்தான் நாம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். 

வருடாந்தம் நாம் வரவு செலவுத் திட்டம் மூலம் குறிப்பிடத்தக்க அளவு குடிநீருக்காக நிதியை ஒதுக்கி எமது நீர் வழங்கல் அமைச்சு பணியாற்றி வருகின்றது. அதன் மூலம் வடக்கிற்கும் வவுனியா பிரதேசத்திற்கும் குடிநீர் வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதன் மூலம் வடக்கில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதே எமது நோக்கமாகும்.