திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள சிறிய மீள்குடியேற்ற கிராமமே கும்புறுப்பிட்டி கிழக்கு  நாவற்சோலை  கிராமம். 

இந்த கிராமத்தில் வாழும் மக்கள் பல்வேறு பொருளாதார கஷ்டங்களுக்கு மத்தியில் சரியான வீட்டு வசதிகளற்ற குடிசைகளில் வாழ்ந்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

சுமார் 100 க்கும் அதிகமான குடும்பங்கள் குடிசைகளில் வாழ்ந்து வருகின்றனர்கள்.

தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் வாழ்வதாகவும் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர். 

இக் கிராமத்தில் சுமார் 550 குடும்பங்கள் உள்ளன. 2004  ஆம் ஆண்டு  சுனாமி பேரலையின் போது மீள்குடியேற்றப்பட்டதாகவும் இன்னும் ஓலை குடிசைகள் தகரக் கொட்டில்களிலுமே வாழ்க்கையை நடத்தி  வருவதாகவும் கண்ணீர் வடிக்கின்றனர்.

அன்றாடம் கூலித் தொழில் செய்து தினக்கூலியாட்களாக உள்ளதாகவும் கொரோனாவின் கோரதாண்டவம் காரணமாக தொழில் இன்றி பட்டினியாக சிறு பிள்ளைகளுடன் வாழ்வதாகவும்   அங்கலாய்க்கின்றனர். 

இக் கிராமத்தில் குடிநீர் பிரச்சினையும் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். 

கடந்த நல்லாட்சி அரசில் இப்பகுதியில் சுமார் 90 குடும்பங்களுக்கான வீட்டுத் திட்ட வசதிகளை ஆரம்ப கட்டமாக செய்வதற்கு முன்வந்த நிலையில் ஆட்சி மாற்றம் காரணமாக கைவிடப்பட்ட நிலையில் இடை நடுவே வீடுகள் தேடுவாரற்ற நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். 

இக் கிராமத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட பல்வேறு பிரச்சினைகளுடன் வாழ்வாதாரத்தை கழிக்க வேண்டிய ஒரு இக்கட்டான சூழ் நிலைக்கு தள்ளப்பட்ட எம்மை யாரும் கவனிப்பதாக தெரியவில்லை.

தேர்தல் காலங்களில் மாத்திரம் வீர வசனம் பேசி வாக்குகளை சுருட்டிக் கொள்ளும் அரசியல்வாதிகள் தங்களது வாழ்வாதாரங்களுக்கான ஏற்பாடுகளை செய்து தருவதில்லை எனவும் குற்றம் சுமத்துகின்றனர். 

எனவே தங்கள் கிராமத்துக்கு தேவையான அனைத்து  வசதிகளையும் உரிய அதிகாரிகள் செய்து தருமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.