பொலிஸ் உத்தியோகஸ்தர் என தன்னை அறிமுகம் செய்து கொண்டு வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட நபரும் , கொள்ளையிட பொருட்களை விற்று வந்த அவரது மனைவியும் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

யாழ்ப்பாண நகர் பகுதி , நாவற்குழி , அரியாலை, மானிப்பாய் ஆகிய இடங்களுக்கு சென்ற குறித்த நபர் , வீதியில் தனிமையில் செல்லும் வயோதிபர்கள் , பெண்கள் உள்ளிட்டோரை மோட்டார் சைக்கிள் சென்று வழி மறித்து , தன்னை பொலிஸ் உத்தியோகஸ்தர் என அறிமுகம் செய்து கொண்டு , அவர்களை விசாரணைக்கு உட்படுத்துவது போன்று பாசாங்கு செய்து , அவர்கள் அசரும் நேரமாக அவர்களின் உடைமையில் இருக்கும் பொருட்கள் (கைப்பை) , நகைகள் , பணம் , தொலைபேசி என்பவற்றை கொள்ளையடித்து தப்பி சென்று விடுவார். 

இவ்வாறாக குறித்த நபர் கடந்த 2 வாரங்களில் 06 இடங்களில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்.  சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களுக்கு கிடைக்கப்பெற்றதை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். 

இந்நிலையில் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நாவற்குழி பகுதியை சேர்ந்த 30 வயதுடைய இளைஞனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர். 

 விசாரணையில் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் குறித்த நபரிடமிருந்து , 2 தங்க சங்கிலிகள் , 17 ஆயிரம் ரூபாய் பணம் , கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட  சுமார் மூன்றரை இலட்சத்திற்கும் அதிகமான பெறுமதியுடைய பொருட்கள் என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர். 

அத்துடன் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் மீட்டுள்ளனர். 

இதேவேளை குறித்த நபரினால் கொள்ளையடிக்கப்பட்டு வரும் பொருட்களை விற்பனை செய்து வந்த அவரது மனைவியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டுள்ள இருவரிடமும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.