-ஆர்.ராம்-

கொரோனா தீவிரத்தன்மை குறித்து பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம், தாதியர்கள் சங்கம், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், இலங்கை மருத்துவ சங்கம், உலக சுகாதார நிறுவனத்தின் இலங்கைப்பிரிவு, சமுதாய மருத்துவ நிபுணர்கள், மருத்துவத்துறை பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், எதிர்க்கட்சிகள், சமூக அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் மதத்தலைவர்கள் என்று அனைத்து தரப்பினரும் அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக கடுமையான அழுத்தங்களை பிரயோகித்தனர்.

இதன்பலனாக கொரோனா ஒழிப்பு தொடர்பான விசேட குழுவுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த வெள்ளியன்று நடத்திய சந்திப்பில் “தொற்றா நோய்களால் நீண்ட காலம் பாதிக்கப்பட்டோர் குறித்து விசேட கவனம் செலுத்துங்கள்” என்று பணித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவால்  உத்தியோக பூர்வமாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆனால்  அங்கு நாட்டை முடக்குவதா இல்லையா என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் பகிரங்கப்படுத்தப்படவில்லை.

ஆனால், “கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடைசெய்யப்படுவதோடு கொரோனா தொடர்பிலான சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவது மிகக் கடுமையான முறையில் அவதானிக்கப்படுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது” என கூறியிருக்கின்றார் கொரோனா தடுப்பு தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு படைகளின் பிரதானியும் இராணுவத்தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா. 

ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி நாளொன்றுக்கான கொரோனா இறப்புக்களின் எண்ணிக்கை 61ஆகவும், புதிதாக தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,177ஆகவும் காணப்பட்டது. அதேநேரம்,  “கொழும்பு மாவட்டத்தில் மட்டும் அடையாளம் காணப்படும் டெல்டா வைரஸின் அளவு ஜுலை முதலாம் திகதி 19.3சதவீதமாக இருந்ததோடு ஜுலை 31திகதி ஆகின்றபோது அது 75 சதவீதமாக அதிகரித்துள்ளது” என பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர பகிரங்கமாக அறிவித்திருந்தார். 

மேலும், “கொரோனாவின் உருமாறிய வீரயம் மிக்க டெல்டா வைரஸ் தொடர்பில் உரிய புரிதல் இல்லாது அரசாங்கமும், சுகாதாரத்துறையினரும் இருக்கின்றனர். டெல்டா மிகவும் ஆபத்தானது. அதற்கு இலக்கானவர்கள் நாடாளவிய ரீதியில் இருக்கின்றார்கள். முடக்க நிலைமைகள் முறையாக பின்பற்றப்படவில்லை. கட்டுப்பாடுகளை இறுக்கமாக்க வேண்டும். இல்லையேல் அடுத்த இரு வாரங்களில் நிலைமைகள் மோசமடையும்”என்று அக்காலப்பகுதியில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்திருந்தார். 

ஆனால், இக்கருத்துக்கள் கருத்திற்கொள்ளப்படவில்லை. அலட்சியப்படுத்தப்பட்டன. குறிப்பாக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, துறைசார் நிபுணத்துவத்துடன் கூடிய இராஜாங்க அமைச்சர்களான வைத்தியர்  சுதர்ஷினி  பெர்னாண்டோ புள்ளே, பேராசிரியர் சன்ன ஜயசுமன்ன, சுகாதரத்துறை பணிப்பாளர்கள் உள்ளிட்ட துறைசர்ந்த நிபுணர்கள் 'மௌனிகளாக' ஆக்கப்பட்டுள்ளமையால் அமைதியாகவே இருந்து விட்டனர். அதேநேரம், பதவியேற்ற நாள் முதலே அமைதியாக இருக்கும் சுகாதர அமைச்சின் செயலாளரான மேஜர் ஜெனரல் வைத்தியர் சஞ்சீவ முனசிங்கவும் வாய்திறக்கவே இல்லை. 

நாளுக்கு நாள் தொற்றாளர்கள், மரணிப்பபோர்களின் எண்ணிக்கைகள் அதிகரிக்கவும், ஜெனரல் சவேந்திர சில்வா, சுகாதார சேவைப்பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன, பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் ஆகியோர், “பொதுமக்கள் பாதுகாப்பு வரையறைகளை தாண்டி கட்டுப்பாடற்றுச் செயற்படுகின்றனர்” என்று நேரடியாக பழிசுமத்தினார்கள்.

இக்காலப்பகுதியில் துறைசார்ந்த நிபுணர்களின் நியாயமான கருத்துக்களை தாங்கள் உள்ளீர்க்க வேண்டும் என்றோ அவற்றை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்றே எள்ளளவும் சிந்தித்திருக்கவில்லை. அவ்விதமான மனோநிலையொன்று அவர்களிடத்தில் இருக்கவும் இல்லை. ஏனென்றால் கொரோனா தடுப்பு விடயத்தில் அவர்கள் அரசாங்கத்தின் 'கிளிப்பிள்ளைகள்'.

இம்மாத முற்பகுதியில் பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர, பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண உள்ளிட்டவர்கள் எச்சரித்ததைப்போன்றே (அடுத்த இருவாரங்களில்) தற்போது நிலைமைகள் மோசமடைந்துவிட்டன. கடந்த வெள்ளிக்கிழமை 13ஆம் திகதி நாளொன்றில் கொரோனா மரணங்கள் 156ஆகவும் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,039 ஆகவும் உயர்வடைந்திருக்கின்றது. 

இந்த நிலைமை அடுத்துவரும் நாட்களில் மேலும் தீவிரமடையும் என்று கூறப்படுகின்றது. “கொரோனா மரணங்கள் இந்தியாவை விடவும் 4 மடங்கால் அதிகரித்துள்ளதாகவும் முழுமையாக நாட்டை முடக்காது விட்டால் நாடாளவிய ரீதியில் கொரோனா மரணப்படுக்கையே உருவாகும்” என்று எச்சரித்திருக்கின்றார் சமுதாய வைத்திய நிபுணர் பேராசிரியர் சுனெத் அகம்பொடி. 

அதேபோன்று “சுகாதார பணியாளர்களிடையே தொற்றுப்பரவலடையவதால் இருவாரங்களுக்கு நாட்டை முடக்காது விட்டால் நிலைமைகள் மோசமடையும்” என்பதை வலியுறுத்தி இலங்கை மருத்துவ சங்கத்தினர் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருக்கின்றனர். 

“நாடாளவிய ரீதியில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்கள் 85 சதவீதத்திற்கு மேல் நிரம்பியுள்ளதுடன் அவசர சிகிச்சைப்பிரிவுகள்  90 சதவீதத்திறகு மேல் நிரம்பியுள்ளன. நாடு முழுதும் கடந்த வாரம் 528 ஆக இருந்த ஒட்சிசனை சார்ந்துள்ள நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது 646 ஆக அதிகரித்திருத்துள்ளது” என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர் குழு சுகாதார அமைச்சுக்கு வழங்கிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

அத்துடன், “இப்போதைய நிலைமையை கட்டுப்படுத்த தவறினால் 2,022 ஜனவரி மாதத்துக்குள் சுமார் 18, ஆயிரத்துக்கும் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகலாம்” எனவும் அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதனை விடவும், ஆட்சிமாற்றத்திற்கு உறுதுணையாக இருந்த இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கமும் கூட நாட்டை முடக்குமாறு அரசாங்கத்தினை எச்சரித்துள்ளது. அதேபோன்று “பிணவறைகள் நிறைந்துவழிகின்றன. முன்களப்பணிளாளர்களாக இருக்கும் தாதியர்கள் கொரோன நெருக்கடியில் உள்ளனர்” என்று தாதியர்கள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய எடுத்துக் கூறியுள்ளார். 

இவர்கள் அனைவரையும் விட, ஆட்சியாளர்களை ஆட்சிப்பீடத்தில் அமரவைப்பதற்காக அயராது உழைத்த அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தொட்டுவே ஆனந்த தேரரே அரசாங்கத்திட்டம் ‘நாட்டை உடன் முடக்குமாறு’ பகிரங்கமாக வலியுறுத்திவிட்டார். 

ஆனால் அரசாங்கம் அதற்கு தயாரில்லை. மேற்படி தரப்புக்களின் கூற்றுக்களை அடிப்படையாக வைத்து எழுப்பும் வினாக்களுக்கு பதிலளிக்கக்கூட முன்வரவில்லை. ஜனாதிபதி, செயலகத்தை விட்டு வெளியே வருவதில்லை. பிரதமர் விஜயராமவிலேயே முடங்கியுள்ளார். நிதி அமைச்சர் திறைசேரியில் நிதியில்லாது திணறுகின்றார். 

நிலைமைகளை முகாமை செய்வதில் 'மூலோபாய விற்பனராக' கருதப்பட்ட பீ.பி.ஜயசுதந்தர, “நாட்டை முடக்கினால் மக்களின் வயிற்றுப்பசியை போக்கும் சக்தி அரசிடம் இல்லை” என்பதை குறிப்பிட்டு 'முழுமையான முடக்கலுக்கு' முட்டுக்கட்டையாக இருந்துகொண்டிருக்கின்றார்.

இதனைவிடவும், முழுமையான முடக்கல் நிலைமையொன்றை முறையாக முன்னெடுப்பதற்கு உரிய சட்ட ஏற்பாடுகளும் நாட்டில் இல்லை. அதனை சீர் செய்வதற்காக கடந்த ஆண்டு 28ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் 'அவசரகால பொதுச் சுகாதார நிலைமை ஒன்றைப் பிரகடனப்படுத்தல், பொதுமக்கள் சுகாதாரம் தொடர்பாக அவதானம் செலுத்துவதற்கான விசேட செயன்முறைகளை அங்கீகரித்தல் மற்றும் அதற்கு  இடைநேர்விளைவான விடயங்களை வழங்குதல் என்ற தலைப்பில் தனிநபர் சட்ட மூலத்தை சமர்ப்பித்தார். 

அதற்கு சபையில் எதிர்ப்புக்கள் இல்லாதபோதும், அது சட்டமா அதிபரிடம் அனுப்பட்டது. அவரின் அபிப்பிராயம் பெறப்பட்டு கடந்த நவம்பரில் இரண்டாது வாசிப்பு நிறைவடைந்து சமர்ப்பிக்கப்பட்ட போதும் 'தனிநபர் சட்டமூலம்தானே ஆறு மாதங்களாகவில்லையே' என்று அர்த்தமற்ற காரணம் கூறி கிடப்பில் போடப்பட்டிருக்கின்றது. 

கொரோனாவை கட்டப்படுத்துவதில் ஆட்சியாளர்களினதும், அவர்களின் ஏவலாளர்களான இராணுவ செயலணியினதும் 'இயலாமை' வெளிப்பட்டு விட்டது. இனியும் ஆட்சி அதிகாரம் பறிபோய்விடும் என்ற அச்சத்திலும், வரட்டு கௌரவித்திற்காகவும் ஏதேச்சதிகாரமாகவும், பிடிச்சிராவித்தனமாகவும் இருப்பதில் பலனில்லை. அவ்வாறிருந்தால் அழியப்போவது மக்களே. மக்கள் அழிந்தால் மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கான ஆணையை யாரிடம் கோருவது. மயான தேசத்தில் ஆட்சி புரிய முடியாது என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

எனவே, அரசியலுக்கு அப்பால், ஆளும், எதிர் அணிகளிலும், சுகாதாரத்துறையிலும், புலம்பெயர் தேசங்களிலும் உள்ள நிபுணத்துவம் வாய்ந்தவர்களை ஒருங்கிணைத்தல் அவசியமாகின்றது. அதுவே இந்து சமுத்திரத்தில் இருக்கும் குட்டித்தீவு சுடுகாடாக மாறாது முத்தாகவே நீடிப்பதற்கு வழிசமைக்கும்.