- சிவலிங்கம் சிவகுமாரன் -
இரண்டு வாரங்களுக்கு முன்பு பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தின் கிழக்குப் பகுதி ஒன்றில் அமைந்துள்ள விநாயகர் ஆலயம் ஒன்றை கும்பல் ஒன்று  உடைத்து சேதமாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

இதற்கு பாகிஸ்தான் பாராளுமன்றிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோடு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இச்சம்பவத்துக்கு தனது கடுமையான கண்டனத்தை சமூக ஊடகங்களில் தெரிவித்திருந்தார். மட்டுமின்றி இச்சம்பவத்தோடு தொடர்புடைய 20 பேர் கைது செய்யப்பட்டனர். 

 சம்பவம் இடம்பெற்ற பஞ்சாப் மாகாணத்தின் கிழக்குப்பகுதியிலுள்ள ரஹீம் யார் கான் மாவட்டத்திலிருக்கும் போங்க் நகரில் 100க்கும் மேற்பட்ட இந்துக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். சில வாரங்களுக்கு முன்னர் இப்பகுதியில் இடம்பெற்ற சம்பவமே ஆலய உடைப்புக்கு காரணமாகியது.

நடந்தது என்ன?
இஸ்லாமியர்களின் மத கற்கை கல்வி நிறுவனமாக விளங்கும் மதரஸா ஒன்றின் நூலகத்தின் தரைவிரிப்பில் 8 வயது இந்து மாணவன் ஒருவன் சிறுநீர் கழித்து விட்டதாக குற்றம் சுமத்துப்பட்டு கைது செய்யப்பட்டான். அச்சந்தர்ப்பத்தில் சில நூல்களும்  நனைந்து விட்டதாகவும் இது ஒரு இறை நிந்தனை அல்லது அவதூறு என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் மேற்படி சிறுவன் கைது செய்யப்பட்டு ஒரு வாரம் வரை சிறையிலடைக்கப்பட்டார். சிறுவன் என்ற படியால் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

இறைநிந்தனை குற்றச்சாட்டில், பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட மிகவும் வயது குறைந்த சிறுவனாக அவர் விளங்குகிறார். 

அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படாமல் பிணை விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவே மேற்படி சிறுவன் வாழ்ந்து வரும் பிரதேசத்திலுள்ள விநாயகர் ஆலயம் இஸ்லாமியர்களால் சேதமாக்கப்பட்டது. எனினும் இந்த ஆலயத்தை திருத்தி தருவதற்கு அரசாங்கம் உறுதியளித்துள்ளது. 

ஆனால் இப்போது எழுந்திருக்கும் பிரச்சினை என்னவென்றால் பாகிஸ்தான் சட்டப்படி இறைநிந்தனை குற்றத்துக்கு மரண தண்டனையே இத்தனை காலமும் வழங்கப்பட்டு வந்தது. பிணையில் விடுதலை செய்யப்பட்டாலும் சிறுவன் பாதுகாப்பான தடுப்புக்காவலில் இருக்கின்றார். அந்த சிறுவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.

சிறுவன் வாழ்ந்து வந்த பிரதேச இந்து ஆலயம் சேதமாக்கப்பட்டதன் பின்னர் அச்சம் காரணமாக அப்பிரதேசத்தில் வாழ்ந்து வரக்கூடிய பெரும்பான்மை இந்துக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அதே வேளை   அவரது  பெற்றோரும் தலைமறைவாகியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதால் அதை தணிப்பதற்கு பொலிஸார் அனுப்பப்பட்டுள்ளனர். குறித்த சிறுவனுக்கு தண்டனை வழங்க வேண்டாம் என உலக நாடுகளும் தற்போது பாகிஸ்தானை கேட்டுக்கொண்டுள்ளன. சர்வதேச மன்னிப்புச்சபை பாகிஸ்தானிடம் பகிரங்கமாக இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-08-15#page-6

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 
https://bookshelf.encl.lk/.