- பேராசிரியர் செ.சந்திரசேகரம்
பொருளியல்துறை
யாழ்.பல்கலைக்கழகம் -

கடந்த மே ஆறாம் திகதி  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கையொப்பமிட்டு இலங்கைக்கு இரசாயன உள்ளீடுகளை இறக்குமதி தடை செய்யும் அதிவிசேட வர்த்தகமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. இந்தச் செய்தி அன்றில் இருந்து இன்று வரை இலங்கையின் ஊடகங்களில் மட்டுமன்றி உலகலாவிய ரீதியிலும் ஒரு முக்கியமான கொள்கை தெரிவிற்கான பேசுபொருளாக மாறியிருக்கின்றது. இக்கொள்கைத் தெரிவு சரியா, பிழையா என்பதை ஒரு வார்த்தையில் பதிலளிக்கும்படி எனது இறுதி வருட மாணவர்களை கேட்ட போது 25 மாணவர்களில் 16 மாணவர்கள சரி எனவும் 9 மாணவர்கள் பிழை எனவும் பதில் தந்தார்கள்.

இக்கட்டுரையின் ஆரம்பத்திலேயே நஞ்சற்ற உணவு உற்பத்தியும் ஆரோக்கியமான மனித வாழ்வும் மனித குலத்துக்கு மிக மிக அவசியமானது என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை என்பதை தெரிவிப்பதோடு இக்கொள்கையை ஒரு சாதாரண மனிதன் என்ற வகையில் நான் ஏற்றுக்கொள்கிறேன். 

ஆனால் ஒரு பொருளாதாரப் பேராசிரியர் என்ற வகையில் இத்தடையை நான் பின்வரும் காரணங்களுக்காக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை மிகவும் வன்மையாக குறிப்பிட விரும்புகின்றேன். பெரும்பான்மையானவர்கள் சரி எனக் கூறுகின்ற விடயங்கள் அனைத்தும் சரி என்று முடிவாகக்கொள்ள முடியாது. சர்வாதிகாரி ஹிட்லரின் கொள்கைக்கு பின்னால் பெரும்பான்மையினரின் ஆதரவு இருந்தது. ஆனால் பல அழிவுகளுக்கு பின்னர் அந்தப் பெரும்பான்மையினரின் ஆதரவு பிழையென்று நிரூபிக்கப்பட்டது.

இரசாயனப் பாவனையை தடைசெய்து அந்நிய செலாவணியை சேமிக்கலாமா?
பொருளாதார அபிவிருத்தியில் விவசாய அபிவிருத்தி பல்வேறுபட்ட காரணங்களுக்காக அவசியமானதாகக் காணப்படுகின்றது. இலங்கையின் விவசாயத்துறைக்குப் பொருத்தமான பல காரணிகளின் மத்தியில் 1978இல் இருந்து கிடைத்த தாராள விவசாய இரசாயன உள்ளீடுகள் மற்றும் தொழில்நுட்ப முறையினால் பிரதான உணவாகிய அரிசியில் கூட பூரணமான தன்னிறைவை இன்னும் அடையவில்லை. 

இலங்கையின் அரிசி தேவையில் சராசரியாக 95சதவீதம் மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றது. இதுகூட இலங்கையின் பல்வேறுபட்ட அரிசிக்கு மாற்றீடான கோதுமை, கடலை மற்றும் பருப்பு வகைகளின் இறக்குமதிகளால் உருவானதாகும். இவ்வாறான இறக்குமதிகள் தடைசெய்யப்பட்டிருந்தால் இந்த 95 சதவீத அரிசியின் தன்னிறைவானது 65-70 சதவீதத்தில் தான் இருந்திருக்கும் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. 

இலங்கை மக்களின் உணவு நுகர்வு அமைப்பில் அரிசி இல்லாத ஏனைய உணவுப் பொருட்கள் கனிசமான இடத்தை வகிக்கின்றன. உதாரணமாக எங்களுடைய பாட்டன் பாட்டி மூன்று வேளையும் சோறு உண்டார்கள். எங்களுடைய பெற்றோர்கள் இரண்டு வேளைகள் சோறு உண்டார்கள். நாம் ஒரு வேளை சோறு உண்கின்றோம். எங்களுடைய பிள்ளைகள் ஒரு வேளையே சோறு உண்ண தயங்குகிறார்கள். 

இற்றைக்கு 50 வருடங்களுக்கு முன்னர் சராசரியாக 6 அங்கத்தவர்களை கொன்ட ஒரு குடும்பம் ஒரு நாளைக்கு ஏறத்தாள மூன்று கிலோ அரிசியை உண்டார்கள். தற்போது அதே உறுப்பினர்களைக் கொண்ட குடும்பம் ஏறத்தாழ அரைக்கிலோ அரிசியை மட்டும் உண்ணுகின்றது. 

இரண்டரைக் கிலோ அரிசியின் இடத்தை ஏனைய உணவுப் பொருட்கள் நிரப்பி விட்டன. இந்த ஏனைய உணவுப் பொருட்களில் அநேகமானவை இறக்குமதி செய்யப்பட்டவை ஆகும். எனவே உள்நாட்டில் அரிசியையும் அதில் சார்ந்து இருக்கும் விவசாயிகளினதும் வருமானத்தை உறுதிப்படுத்வதற்கு உணவுப் பொருட்கள் இறக்குமதி மீது பாரிய வரி விதித்து  இறக்குதியை தடுத்து அவற்றுக்கு செலவழிக்கும் அந்நிய செலாவணியை மீதப்படுத்துவதற்கு பதிலாக, வருடம் ஒன்றுக்கு  300-400 மில்லியன் அமெரிக்க டொலர்களை விவசாய இரசாயன இறக்குமதிகள் மீதான செலவை மீதப்படுத்துவதற்காக தற்போதைய தடை கொண்டுவரப்பட்டுள்ளது. 

2014 இல் 310.9 மில்லியன் டொலர்களாக இருந்த கோதுமை மற்றும் தானியங்களின் இறக்குமதி 2019 இல் 247.2 மில்லியன் டொலர்களாகக் குறைவடைந்து 2020 இல் 396.4 மில்லியன் டொலர்களாக மீண்டும் அதிகரித்துள்ளது. எனவே அரசங்கம் அந்நிய செலாவணியை மீதப்பத்துவதற்காக இறக்குமதித் தடைகளைக் கொண்டுவர வேண்டிய தேவை இருக்குமானால் தனித்து கோதுமை இறக்குமதியை கட்டுப்படுத்தினாலே இந்த விவசாய இரசாயன உள்ளீடுகளின் இறக்குமதிக்குச் செலவு செய்யும் அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்ள முடியும். 

உலக நாடுகளின் பொருளாதார வரலாறுகளின் அடிப்படையில் பசுமைப்புரட்சி என்பது வீட்டுத்தோட்டத்தினாலும், இயற்கை விவசாயத்தினாலும் மற்றும் மரபார்ந்த குடியான்களினாலும் உருவாக்கப்படவில்லை. மாறாக அவை விவசாயத்தில் நவீன நுட்ப முறைகளை உருவாக்கிய செயற்கை விவசாய முறைகளினாலும் வர்த்தக விவசாயமாக நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்புக்களாலும் உருவானவையாகும். 

இலங்கை அதன் வரலாற்றில் பசுமைபுரட்சியை தற்போது வரையில் அடையவில்லை. அவ்வாறான ஒரு பரிதாப நிலைமையில் புரட்சியை நோக்கிய விவசாயக் கொள்கையில் உள்ள தடைகளை களைந்து நவீன விவசாயத்தை முன்னெடுத்து செல்வதற்கு பதிலாக அதில் இருந்து விலகி பின்னேக்கி இயற்கை விவசாயத்துக்கு செல்வது நகைப்புக்கு உரிய கொள்கைத் தெரிவாகவே இருக்கின்றது. 

எத்தனையோ நாட்டை நிதிநெருக்கடி நிலைமைகளுக்கு இட்டுச் செல்கின்ற இறக்குமதிகளைத் தடை செய்து உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கு பதிலாக உள்நாட்டு உற்பத்திகளையும் அதில் சார்ந்து இருக்கின்ற மக்களையும் பாதிக்கின்ற விவசாய உள்ளீடு இறக்குமதிகளை தடை செய்து அந்நிய செலாவணியை மீதப்படுத்த வேண்டுமா? அந்நிய செலாவணி நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு நாட்டு மக்களுக்கு உணவு வழங்குகின்ற பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கின்ற விவசாயத் துறையில் கைவைக்கலாமா?

எனவே இத்தடைக்கு முன்வைக்கப்படுகின்ற அந்நிய செலாவணியை மீதப்படுத்தல் என்ற வாதம் வலுவற்றதாகின்றது. இலங்கை விவசாய உள்ளீடுகளை விட ஏனைய உணவு இறக்குமதிகளை தடை செய்து அந்நிய செலாவணியை மீதப்படுத்த முடியும். இதற்கு பின்வரும் விடயங்கள் முக்கியமானவையாகின்றன.

ஆரோக்கியமான நாட்டைக் கட்டியெழுப்புதல் 
 இறக்குமதித் தடைக்கு முன்வைக்கப்படும் அடுத்த நியாயப்பாடு நஞ்சற்ற உணவை உற்பத்தி செய்து ஆரோக்கியமான இலங்கையரை உருவாக்குவதாகும். உரோமபுரியில் பஞ்சம் உருவான போது அமைச்சர்கள் அரசனுக்கு மக்கள் பாணுக்கு வழி இல்லாமல் கஷ்டப்படுகின்றார்கள் எனக் கூறிய போது அரசன் பாணுக்கு வழி இல்லாவிட்டால் கேக்கை சாப்பிடச் செல்லுங்கள் என்று கூறிய கதைக்கு ஒப்பானதாகவே மேற்படி நியாப்பாடு காணப்படுகின்றது. 

உலகிலே 50-60 ஆயிரம் அமெரிக்க டொலர்களை தலாவருமானத்தைக் கொண்ட வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா ஜப்பான் மற்றும் ஜரேப்பிய ஒன்றிய நாடுகள் யாவற்றிலும் இயற்கை விவசாயத்துக்கு ஊக்குவிப்புகள் வழங்கப்பட்ட போதும் இந்த நடுகளின் பாரிய விவசாய உற்பத்திகள் இரசாயன உள்ளீடுகளை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகின்றன. 

வருமானம் கூடிய மக்கள் இயற்கை விவசாய உற்பத்திகளை அதிகவிலை கொடுத்து நுகர்கின்றார்கள். இந்த உயர்ந்த வருமான நிலையில் உள்ள நாடுகளிலேயே இயற்கை விவசாயத்தை விட இரசாயன விவசாயம் முன்னணி வகிக்கும் போது, வெறுமனே 3,850 அமெரிக்க டொலர்கள் தலா வருமானத்தைக் கொண்ட இலங்கையின் பொருளாதாரம் பலவீனமான நிலையில் (35-40 சதவீதம் உணவு இறக்குமதியில் தங்கியிருப்பதோடு 88,000 கோடி பணத்தை அச்சடிக்கும் நிலையில்) இந்த நஞ்சற்ற விவசாய உற்பத்தி  தேவையா? என்ற வினா எழுகின்றது. 


சுருக்கமாக கூறினால் கனிசமான அளவு இரசாயன உள்ளீடுகளைக் கொண்டு உற்பத்தி செய்கின்ற விவசாயத்தை, இறக்குமதியில் தங்கியிருக்கின்ற நிதி நிலைமையில் ஸ்திரமற்ற தன்மையை கொண்ட குறைந்த வருமானத்தைக் கொண்ட இலங்கைப் பொருளாதாரத்துக்கு ஆடம்பரமான இந்த நஞ்சற்ற உணவு உற்பத்தி என்பது ‘பிச்சை எடுத்து கிழவிக்கு பட்டுச் சேலை கட்டி’ அழகு பார்ப்பதற்கு ஒப்பானது. 

சூழல் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமான உணவு உற்பத்தி என்பது உலகமெல்லாம் ஒன்று திரண்டு ஒன்றாக அடையப்பட வேண்டிய இலக்காகும். இலங்கை இறக்குமதி செய்யும் அப்பிள்,கோதுமை, ஏனைய தானியங்கள் நஞ்சற்ற முறையில் உற்பத்தி செய்யப்படுகின்றனவா? என்பதை இட்டு எந்தவித அக்கறையும் கொள்ளாத அரசு நீண்ட நெடுங்காலம் பல்வேறுபட்ட பிரச்சினைகளுடன் போராடிக்கொண்டிருக்கின்ற விவசாயிகள் மீது கைவைத்து  இந்த நாட்டை முழுமையாக அழிப்பதற்கு தயாராகின்றது. 

இலங்கையில் சிறுநீரக நோய்களுக்கு இரசாயன வளமாக்கிகள் தான் காரணம் என்று எந்த ஆய்வுகளும் ஆணித்தரமாக குறிப்பிடப்படவில்லை. அவ்வாறு இருந்தாலும் கூட இரசாயன வளமாக்கி பயன்பாடுகளின் அளவில் கட்டுப்பாடுகளை கொண்டு வரவேண்டுமே ஒழிய அவற்றை முற்றாக கட்டுப்படுத்தும் போது பல மக்கள் உணவு இன்றி பட்டினியால் இறக்கும் நிலை உருவாகும். 

ஒரு நாட்டின் மக்கள் தமது பசிக்கு தாம் விரும்பிய அளவில் உணவு வழங்கிய பின்பே உணவின் தரம் பற்றி அக்கறை கொள்ள முடியும். மூன்று வேளையும் பசியால் வடுபவர்களுக்கு உணவு வழங்கும் போது அவர்களுக்கு பிரியாணி வழங்க வேண்டும் என்று யாரும் சிபாரிசு செய்வதில்லை. 

இலங்கையில் அமைச்சர்களுக்கும் அரசுக்கும் ஆலவட்டமும் சாமரையும் வீசுகின்ற உயர்வர்க்கத்தினருக்கு அவர்களின் குடும்பங்களின் நல்வாழ்வுக்கு ‘இயற்கை உணவு’ தேவைப்படலாம். அவர்கள் அவற்றுக்கென ஒரு பொறிமுறையை உருவாக்கி உயர்ந்த விலை கொடுத்து அவற்றை நுகரலாம். நாம் இங்கு விவாதிப்பது யாதெனில் அன்றாடம் உழைக்கும் வர்க்கத்தின் நிமைமையைப் பற்றியதாகும்.

மாற்று இயற்கை வளமாக்கியின் நிலை
பொருளாதாரத்தின் கொள்கை மாற்றங்களும் தெரிவுகளும் திடீரென அதிர்சியாக ஒரு இரவுக்குள் கொண்டுவரக் கூடாது. அவை படிப்படியாக நிதானமாக சிந்தித்து மெதுவாக அமுல்படுத்தப்பட வேண்டியவை ஆகும். ஒழுங்கான உறுதியான இயற்கை வளமாக்கித் திட்டமொன்றை கொள்கை ரீதியாக வளரசெய்வதற்கு முன்னதாக இந்த இறக்குமதித்தடை திடீரென வந்திருப்பது இலங்கைப் பொருளாதாரத்துக்கு பாதகமாக அமையும். 

பல இறக்குமதிகளைத் தடைசெய்ய முடியாத நிலை
இலங்கைப் பொருளாதாரத்துக்கு பாதிப்பை உருவாக்க கூடிய எத்தனையே இறக்குமதிகளை இலங்கையால் தடை செய்யமுடியாது. இலங்கை மக்களுக்கு அளவுக்கு மீறிய சமூக நலச்செலவீடுகளை செய்வதற்கும் யுத்தத்தை செய்த மிகப்பெரிய பாதுகாப்பு துறையை பேணுவதற்கும் தேவையான நிதி இலங்கையின் உள்நாட்டு மூலங்களில் இருந்து உருவாக்கப்படவில்லை. 

மாறாக இவை காலத்துக்கு காலம் பெற்ற வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் அந்நிய உதவிகள் வழியாகவே பெறப்பட்டன. உதவி வழங்கிய நாடுகள் இலங்கையுடன் பல வர்த்தக உடன்படிக்கைகளைச் செய்தன. அவ்வுடன்படிக்கைகளின் பிரதானதொரு விடயம் குறித்த நாடு இலங்கையுடன் கொண்டிருந்த வர்த்தகத்தில் இருந்த கட்டுப்பாடுகளை நீக்குவதாகும். எனவே இலங்கை பல இறக்குமதிகளை தன்னிச்சையாக தடை செய்ய முடியாது. அவ்விதமாக செயற்படுவதற்கு வர்த்தக உடன்படிக்கைகள் இடம் கொடுக்காது.

அரசாங்கம் ஏன் அவசரப்பட்டது?
இலங்கையில் ஒரு அரசன் சிறந்த அரசனாக மக்களால் போற்றப்பட வேண்டுமாக இருந்தால் அந்த அரசன் உள்நாட்டு விவசாயத்துக்கும் பௌத்த மதத்துக்கும் சேவையாற்றி இருக்க வேண்டும் என்பது வரலாற்று காலம் தொட்டு தற்போது வரை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற பாரம்பரியமாகிவிட்டது.

ஆட்சியில் உள்ள  அரசாங்கம் பௌத்த மதத்துக்கு எவ்விதமான தொண்டாற்றுகின்றது என்பது யாவரும் அறிந்த விடயம். உள்நாட்டு விவசாயத்தை இயற்கை விவசாயமாக மாற்றி மக்களின் ஆதரவைப் பெற அரசு முயற்சிக்கின்றது. ‘வேலியில் படரும் கொடி செடிகளை கறியாகவும் சம்பலாகவும் பால்சோற்றை உணவாகவும் உட்கொண்டு வாழ்வது தான் வாழ்க்கை’ என்ற உளப்பாங்கு உள்ள மக்கள் இருக்கும் வரை அரசியல்வாதிகளின் இந்த கூத்துக்களை இலங்கை சுதந்திரம் அடைந்த காலம்தொட்டு தற்போது வரையில் செய்துவந்தமை கண்கூடு.

விவசாயக் கொள்கை மாற்றத்துக்கு ‘வியத்மக’ என்ற அமைப்பின் ஆலோசனைகளும் பெறப்பட்டன. அரசியல் தலைவர்களுக்கு  ஆலோசனை கூறும் பெரும்பான்மையினர் தங்கள் அறிவுரையை சிறப்பாக செய்திருந்தால் இலங்கை எப்பவோ குட்டிச்சிங்கப்பூர் அல்ல பெரிய சிங்கப்பூராகவே இருந்திருக்கும். இலங்கை பொருளாதாரம் சிம்பாபே போன்று பணம் அச்சடிக்கும் நிலைக்கு சென்றுவிட்டதாக அவர்களே குறிப்பிடுகின்றார்கள். அந்த அளவுக்கு இலங்கைப் பொருளாதாரம் சென்று விட்டது. இதன் மீட்சிக்கு ஒரே இரவில் கொள்கைகளை நடைமுறைப்படுத்த முயல்தல் தீர்வுகளை வழங்குவதற்கு பதிலாக மேலும் நிலைமைகளை சிக்கல்களுக்கே உள்ளாக்கும்.