மன்னார் மாவட்டத்தில் நேற்று சனிக்கிழமை (14) காலை மேலும் ஒரு கொரோனா மரணம் நிகழ்ந்துள்ள நிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 9ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட மன்னார் கீரி பகுதியைச் சேர்ந்த 77 வயதுடைய வயோதிபர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக நேற்று சனிக்கிழமை (14) காலை உயிரிழந்தார்.

அவருக்கு ஏற்பட்ட நிமோனியா காய்ச்சல் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இந்த நிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் மன்னார் மாவட்டத்தில் கடந்த 1 ஆம் திகதி தொடக்கம் நேற்றுமுந்தினம் வெள்ளிக்கிழமை (13) வரையிலான 13 நாட்களில் 220 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் இவ்வருடம் மாத்திரம் 1244 கொரோனா தொற்றாளர்களும், மாவட்டத்தில் மொத்தமாக 1261 கொரோனா  தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.