(லியோ நிரோஷ தர்ஷன்)

நாட்டில் தற்போது பரவி வரும் டெல்டா வைரஸ் தொற்று தாக்கத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம். 

அமுல் படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் போதுமானதல்ல. எனவே உடன் அமுலுக்கு வரும் வகையில் குறைந்தது மூன்று வாரத்திற்கு 'பிளக் லொக்டவுன்' ஒன்றுக்கு செல்லுமாறு வைத்திய நிபுணர்கள் மற்றும் சுகாதார தரப்பினர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

முழுமையான வலியுறுத்தல்கள் அடங்கிய ஆவணங்களை வைத்திய நிபுணர்கள் மற்றும் சுகாதார தரப்பினர்  சுகாதார அமைச்சுக்கு வழங்கியுள்ளனர்.  

கொவிட் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதை நோக்காக கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் தற்போதுள்ள பயணக் கட்டுப்பாடுகள் பயனுள்ளதாக அமையாது. 

எனவே மேலும் கடுமையானதாக்கப்பட வேண்டும். அதாவது முழு முடக்கத்திற்கு செல்ல வேண்டும். குறைந்தது 3 வாரத்திற்கு அதிகமானதாகவே முடக்கம் அமைய வேண்டும். அவ்வாறு அல்லாது  தொற்றை கட்டுப்படுத்த இயலாது.

 கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் கொவிட் தொற்றால் உயிரிழப்பர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. 

அதனை கட்டுப்படுத்துவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகள் மற்றும் ஏனைய முடக்க நடவடிக்கைகள் குறித்து காலம் தாமதிக்காது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 இரு கட்ட தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் இன்னும் நிறைவடைய வில்லை. அந்த பணிகள் முழுமையடைய  இன்னும் குறைந்தது இரு மாதங்களேனும் செல்லும். அவ்வாறிருக்கையில் பயனற்ற கட்டுப்பாடுகளால் ஆபத்து மிக அதிகமாகும். எனவே அரசாங்கம் தாமதப்படுத்தாது முழு முடக்கத்திற்கு செல்ல வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.