(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வீட்டில், வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட நிலையில், உடலில் தீ பரவி உயிரிழந்த விவகாரத்தில் 2 ஆவது பிரேத பரிசோதனைக்காக தோண்டியெடுக்கப்பட்ட  16 வயதான ஹிஷாலினியின் சடலம் இன்று மீள அடக்கம் செய்யப்பட்டுள்ளது. 

கடந்த  ஜூலை மாதம் 30 ஆம் திகதி நுவரெலியா நீதிவான் முன்னிலையில்  எரிகாயங்களுடன் உயிரிழந்த ஜூட்குமார் ஹிஷாலினியின் பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள டயகம தோட்ட பொது மயானத்திலிருந்து சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

இந் நிலையில்கொழும்பு பல்கலைக் கழகத்தின்  வைத்திய பீடத்தின்  சட்ட வைத்தியத் துறை தொடர்பிலான பேராசிரியர் ஜீன் பெரேரா , கொழும்பு பல்கலைக் கழக வைத்தியத் துறையின் சட்ட வைத்திய பீடத்தின் பிரதானி சிரேஷ்ட விரிவுரையாளர் சமீர குணவர்தன, பேராதனை போதனா வைத்தியசாலையின் விஷேட சட்ட வைத்திய நிபுணர் வைத்தியர்  பிரபாத் சேனசிங்க ஆகியோர்  கொண்ட குழுவினரால் கடந்த ஜூலை 31 ஆம் திகதி  2 ஆவது பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இந் நிலையில் அது முதல் ஹிஷாலினியின் சடலம் பேராதனை வைத்தியசாலையின் சவச் சாலையிலேயே வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பெற்றோருக்கு கையளிக்கப்பட்டு, டயகமவுக்கு எடுத்து செல்லப்பட்டு உடனடியாகவே நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 2 ஆவது பிரேத பரிசோதனையின் அறிக்கை இதுவரை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படாத நிலையில் மிக விரைவில் அது நீதிமன்றுக்கு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.