இலங்கைக்கான  நியூசிலாந்து உயர்ஸ்தானிகராக நியமனம் பெற்றுள்ள மிஷெல் எப்பல்டொன் இன்று  (13) காலை மரியாதை நிமித்தமான அழைப்பையேற்று, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19  தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவுடன் சந்தித்து கலந்துரையாடினார். 

 

உயர்ஸ்தானிகர் மிஷெல் எப்பல்டொன் தனது நற்சான்று பத்திரத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்விடம் கையளித்ததை தொடர்ந்து  இராணுவ தலைமையகத்திற்கு வருகை தந்து இராணுவத் தளபதியைச் சந்தித்தார். 

இச்சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இருதரப்பு உறவுகள், இராணுவ அமைப்புகள் மற்றும் இலங்கையின் முப்படையினருக்கான பலதரப்பட்ட பயிற்சிகளுக்கான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான  சாத்தியக்கூறுகள் என்பன தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டது.  

அத்தோடு நியூசிலாந்து எதிர்காலத்திலும் இலங்கை இராணுவத்திற்கு பக்கபலமாக நிற்குமென எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.