மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நொச்சிமுனை கிராமத்தின் வீடொன்றில் கணவன் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதுடன் மனைவி நஞ்சருந்திய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு கல்லடி இசை நடனக்கல்லூரி வீதி நொச்சிமுனைக் கிராமத்திலேயே இச்சம்பவம் இன்று அதிகாலை இடம் பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீதியின் வீடொன்றில் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடப்பதாக காத்தான்குடி பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு இன்று காலை விரைந்த காத்தான்குடி பொலிசார் அங்கு காணப்பட்ட சடலத்தை மீட்டுள்ளனர்.

பொவெள்ளத்தம்பி மகேஸ்வரன்(26) என்பவரே இந்த சம்பவத்தில வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இவரது மனைவியான மகேஸ்வரன் சிந்து(26) என்பவர் நஞ்சருந்திய நிலையில் காணப்பட்டுள்ளார். இவரை அயலவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கு அனுமதித்துள்ளனர்.

குறித்த பொ.வெள்ளத்தம்பி மகேஸ்வரனின் சடலத்தில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாகவும் இவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கலாமெனவும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

வவுனதீவு கொத்தியபுரத்தைச் சேர்ந்த பொவெள்ளத்தம்பி மகேஸ்வரன்(26) வன்னியைச் சேர்ந்த  மகேஸ்வரன் சிந்து(26) ஆகிய  இருவரும் திருமணமாகி சுமார் 6 மாதங்களாகின்றன. 

இவர்கள் மட்டக்களப்பு நொச்சிமுனைக் கிராமத்தில் வீடொன்றில் வாடகைக்கு இருந்து வந்ததாகவும் இவர்களிருவருக்கும் குழந்தைகள் இவ்லையெனவும் கணவன் மனைவியான இவ்விருவருக்குமிடையில் அடிக்கடி தகராறு இடம்பெற்று வந்த நிலையில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக ஆரம்பக்கடட் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

கணவனை மனைவி வெட்டி கொலை செய்திருக்கலாமெனவும் கணவனை கொலை செய்து விட்டு மனைவி நஞ்சருந்திருக்கலாமெனவும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் தடவியல் அதிகாரிகள் அங்கு தடவியல் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

இவர்களின் வீட்டில் அடிக்கடி சண்டை பிடிக்கும் சத்தம் கேட்கும் எனவும் வழமைபோன்று நேற்று இரவும் சண்டையிடும் சத்தம் கேட்டதாகவும் அயலவர்கள் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில்  காத்தான்குடி பொலிசார் தொடர்ந்து விசாரணகளை மேற் கொண்டு வருகின்றனர்.