(இராஜதுரை ஹஷான்)
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எரிவாயுவின் விலையை அதிகரிக்க நுகர்வோர் அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளமை பாதிக்கப்பட்ட மக்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.

ஆகவே நுகர்வோருக்கும் நிவாரணம் வழங்க அரசாங்கம்  உரிய நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்தார்.

 லாப் ரக சமையல் எரிவாயுவின் விற்பனை விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 உலக  சந்தையில் எரிவாயுவின்  விலை அதிகரிக்கப்பட்டதால் தேசிய மட்டத்தில் எரிவாயுவின் விலையினை அதிகரிக்க வேண்டும். என லாப் ரக எரிவாயு  விநியோக நிறுவனத்தினர்  கோரிக்கை விடுத்தார்கள். இவர்களின் கோரிக்கை நியாயமானதாக காணப்பட்டாலும், அதனை செயற்படுத்தும் தருணம் இதுவல்ல என்பதை நுகர்வோர் அதிகார சபை அறிந்திருக்க வேண்டும்.

 கொவிட் -19 வைரஸ் தாக்கத்தினால் நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறான நிலையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளமை பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது என்றார்.