(எம்.ஆர்.எம்.வசீம்)
தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தில் நாங்கள் அறிமுகப்படுத்திய முறைமைக்கு மாறாக அரசாங்கம் செயற்பட்டதாலே மரண வீதம் அதிகரித்தமைக்கு காரணமாகும். இதற்கு காரணமானவர்களே  தற்போது இடம்பெறும் மரண வீதங்களுக்கு பொறுப்புக்கூறவேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர்  நவீன் டி சொய்சா தெரிவித்தார்.

நாட்டில் கொவிட் மரண வீதம் அதிகரித்து வருவது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

 இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கொவிட் வைரஸை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மே மாதத்தில் முறையான வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கத்துக்கு அறிமுகப்படுத்தி கொடுத்திருந்தோம். என்றாலும் அரசாங்கம் அதனை கண்டுகொள்ளாததன் விளைவே தற்போது மரண வீதம் அதிகரிப்பதற்கு காரணமாகும்.

 தடுப்பூசி ஏற்றும் பட்டியலில் முன்னுரிமை வழங்கவேண்டிய பட்டியலை எமது சங்கம் ஆரம்பத்தில் இருந்து அரசாங்கத்துக்கு தெரிவித்து வந்தது. எமது வேலைத்திட்டத்தை புறம்தள்ளி விட்டே தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டது. அதனால் தற்போது அதிகரித்துவரும் மரண வீதங்களுக்கு, எமது வேலைத்திட்டத்தை செயற்படுத்த தவறிய நபர்கள் பொறுப்பேற்கவேண்டும்.

மேலும், நாட்டுக்கு இதுவரை கொவிட் தடுப்பூசி 19.5மில்லியன் கொண்டுவரப்பட்டிருக்கின்றது. அதில் பத்துமில்லியன் தடுப்பூசிகளை சரியான முன்னுரிமை பட்டியலுக்கமைய பெற்றுக்கொடுத்திருந்தால், தற்போது இடம்பெற்றுவரும் மரணங்களில் 90வீதம் வரை தடுத்திருக்கலாம் என்றார்.