(எம்.மனோசித்ரா)
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களுக்கமைய தடுப்பூசி வழங்கும் பணிகளை முன்னெடுக்காமையின் காரணமாகவே இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்டோர் கொவிட் தொற்றால் உயிரிழக்கும் வீதம் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் அரசாங்கம் அதன் தவறை மறைத்து கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 60 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசியை நிராகரித்து தாமாகவே மரணத்தை தேடிக்கொண்டார்கள் என்று பிரசாரம் செய்து கொண்டிருக்கிறது என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், கொவிட் தொற்றாளர்கள் தொடர்பில் அரச தரப்பிலும், பிரதேச மட்டத்திலும் வெளியிடப்படும் தரவுகளுக்கிடையில் பாரிய வித்தியாசம் நிலவுகிறது. உண்மை தரவுகளைக் கூறினால் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீரவிற்கு ஏற்பட்ட நிலைமையே ஏற்படும் என்ற அச்சத்தினால் இவ்வாறு உண்மைகள் மறைக்கப்படுகிறதா?

இது வரையில் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளவர்கள் கொரோனாவை அவர்களாவே தொற்றிக் கொண்டு தவறிழைத்து உயிரிழக்கவில்லை. ஆனால் அரசாங்கம் உயிரிழந்தவர்கள் தடுப்பூசியை நிராகரித்ததைப் போன்று பிரசாரம் செய்து கொண்டிருக்கிறது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களுக்கமைய தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் வினைத்திறனுடன் முன்னெடுக்கப்படாமையே  60 வயதுக்கு மேற்பட்டோர் அதிகளவில் உயிரிழக்க காரணம் என்றார்.