(எம்.மனோசித்ரா)
நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளமை உள்ளிட்ட காரணிகளால் இதுவரையில் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதோருக்கு இராணுவத்தினரால் நடமாடும் சேவை ஊடாக தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று வடகொழும்பு பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடமாடும் சேவை, நாளை வெள்ளிக்கிழமை கொழும்பு தெற்கு பகுதியில் முன்னெடுக்கப்படும் என்று இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இந்த நடமாடும் தடுப்பூசி வழங்கும் சேவை தொடர்பில் இராணுவத்தளபதி மேலும் தெரிவிக்கையில்,  இராணுவம் உள்ளிட்ட முப்படையினர் சுகாதார தரப்பினருடன் இணைந்து தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தினை மிகவும் வேகமாக முன்னெடுத்து வருகின்றனர். கொவிட்பரவலைத் தடுப்பதற்கு தடுப்பூசி மிகவும் முக்கியத்துவமுடையதாகும். அதற்கமைய இதுவரையில் பெற்றுக் கொள்ளப்பட்ட சகல தடுப்பூசிகளும் நாட்டின் பல பகுதிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இவ்வாரம் முதல் இராணுவ வைத்தியசாலை, களுத்துறை வைத்தியசாலை, கம்பஹா ஆகிய வைத்தியசாலைகளிலும் இராணுவத்தினரால் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதுவரையில் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாத, 60 வயதுக்கு மேற்பட்ட வேறு ஏதேனுமொரு நோயால் பாதிக்கப்பட்டோர் இருப்பதாக தெரியவந்துள்ளது. அதற்கமையவே குறித்த தரப்பினரை இலக்காகக் கொண்டு மேல் மாகாணத்திற்குள் மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைகளில் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதன் போது சில நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட தடுப்பூசிகளை தமக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டு உரிய தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதேவேளை இதுவரையில் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத ஒரு குறிப்பிட்ட தரப்பினர் ஒரே இடத்தில் வசிப்பதாகவும் அவர்கள் ஏதேனுமொரு அசௌகரித்தினால் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாமலுள்ளனர். அவர்களை அழைத்து வருவதிலும் சிக்கல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சுடன் இணைந்து இவ்வாறானவர்கள் தொடர்பில் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையிலேயே தற்போது இராணுவத்தினரால் நடமாடும் தடுப்பூசி வழங்கும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய தெரிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட குழுவினருக்கு நேற்று புதன்கிழமை தொலைபேசி ஊடாக எந்த நேரத்திற்கு தடுப்பூசி வழங்கும் குழுவினர் வருகை தருவார்கள் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த நடமாடும் சேவை ஊடாக தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்ப்பவர்கள் இராணுவ நோய் தடுப்பு மற்றும் மனநல மருத்துவ பணிப்பகத்தினை 1906 அல்லது 011 2860002 ஆகிய இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொண்டு  முன்பதிவு செய்துகொண்ட பின்னர் தடுப்பூசிகள் வீட்டிற்கே வந்து வழங்கப்படும். இந்த நடமாடும் சேவை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று இராணுவ ஊடக பணிப்பாளர் பிரிகேடியர் நிலாந்த பிரேமரத்ன தெரிவித்தார்.