(இராஜதுரை ஹஷான்)

எதிர் தரப்பினர் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக கொவிட்-19 வைரஸ் ஒழிப்பு செயலணி மீது குற்றஞ்சாட்டுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்தும் பணிகளை இராணுவத்தினர் மிகவும் நேர்த்தியான முறையில் முன்னெடுத்து செல்கிறார்கள். என்பதை நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். எதிர்வரும் மாதத்திற்குள் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுமைப் பெறும் என தொலைநோக்கு கல்வி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்  சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட் -19 வைரஸ் ஒழிப்பு செயலணி தொடர்பில் எதிர்தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை. தடுப்பூசி செலுத்தும் பணிகளை இராணுவத்தினர் மிகவும் சிறந்த முறையில் முன்னெடுத்துள்ளார்கள். 24 மணித்தியாலமும் தடுப்பூசி செலுத்தும் யோசனையை இராணுவத்தினரே முன்வைத்தனர்.

 தற்போது கொழும்பு மாவட்டத்தில் 24 மணித்தியாலமும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் வெற்றிகரமான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அரசியல்  நோக்கங்களை கருத்திற் கொண்டு எதிர் தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள். தடுப்பூசி செலுத்தலை இராணுவத்தினர் மிகவும் நேர்த்தியான முறையில் முன்னெடுத்து செல்கிறார்கள் என்பதை நாட்டு மக்கள் அறிந்துள்ளார்கள்.

 நாட்டு மக்கள் அனைவருக்கும் எதிர்வரும் மாதத்தின் இறுதி பகுதியில் கொவிட் தடுப்பூசியை செலுத்தி முடிக்க  திட்டமிப்பட்டுள்ளது. பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தற்போதைய நிலையில் சவால்மிக்கதாகும். இவ்வாறான நிலையில்  சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய பாடசாலைகளை விரைவாக திறக்க முயற்சித்துள்ளோம்.

 தொலைநோக்கு  கல்வி  முறைமை தற்போது விரிவுப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தொலைக்காட்சி சேவைகள் ஊடான கற்றல் நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பு செய்யப்படுகின்றன. தொலைக்காட்சி வசதிகள் இல்லாத மாணவர்களின் நலன் கருதி மாற்று நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.