(எம்.மனோசித்ரா)
போலியான ஆவணங்களை உபயோகித்து வேலைவாய்ப்பினைப் பெற்றுத்தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர்  உள்ளிட்ட  இருவர் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மெனிங் சந்தையில் கடைக்கான அறையொன்றை பெற்றுத்தருவதாகக் குறிப்பிட்டு மற்றும் கனடாவில் வேலை வாய்ப்பினைப் பெற்றுத்தருவதாகக்  குறிப்பிட்டு குறித்த சந்தேக நபர்கள் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிசேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

குறித்த சந்தேகநபர்கள் போலியான ஆவணங்களைத் தயாரித்து வத்தளை மற்றும் ஜா-எல ஆகிய பகுதிகளிலுள்ள நபர்களிடம் இவ்வாறு நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து வெவ்வேறு நபர்களுடைய  98 போக்குவரத்து அனுமதி பத்திரங்கள், சுமார்  20 இலட்சம் ரூபா பணம் என்பன குற்ற விசாரணைப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட  சந்தேக நபர்கள் கனேமுல்ல மற்றும் அத்துருகிரிய உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.