அம்பாறை அக்கரைப்பற்று பிரதேசத்தில் 5 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் இருவரை நேற்று புதன்கிழமை (11) இரவு இராணுவ புலனாய்வு பிரிவினர் விசேட அதிரடிப்படையுடன் இணைந்து கைதுசெய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து விசேட அதிரடிப்படையினருடன் இராணுவப்புலனாய்வு பிரிவினர் சம்பவதினமான நேற்று இரவு அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் குறித்த போதை மாத்திரை வியாபாரிகளின் வீட்டை சுற்றிவளைத்து சோதனை நடவடிக்கையை மேற்கொண்டபோது அவர்களிடமிருந்து 5 ஆயிரம் போதை மாத்திரைகளை மீட்டதுடன் இருவரையும் கைதுசெய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட இரு போதை மாத்திரை வியாபாரிகளையும் கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளையும் விசேட அதிரடிப்படையினர் பொலிஸாரிடம்  ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து  சந்தேக நபர்கள் இருவரையும்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.