(இராஜதுரை ஹஷான்)
நுகர்வோர் அதிகாரசபை தமது பொறுப்பை நிறைவேற்றாமையால் நாட்டில் லாப் சமையல் எரிவாயு விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமது அமைச்சுக்குரிய நுகர்வோர் அதிகாரசபை இப்பிரச்சினைக்கு தீர்வு காண எடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதை பொறுப்புடன் குறிப்பிட்டுக்கொள்ள  வேண்டும். என சுட்டிக்காட்டி கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் மேம்பாடு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன  அறிக்கை வெளியிட்டுள்ளார்.

லாப் சமையல் எரிவாயு நுகர்வோர் எதிர்நோக்கியுள்ள அசௌகரியத்துக்கு விரைவாக தீர்வு வழங்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மிலால் கடந்த 8ஆம் திகதி நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருந்ததுடன் அதற்கு பதிலளிக்கும் முகமாகவே இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

2019ஆம் ஆண்டு ஒரு மெட்றிக் தொன் சமையல் எரிவாயுவின் விலை 361 அமெரிக்க டொலராக காணப்பட்ட சந்தர்ப்பத்தில் நுகர்வோர் அதிகாரசபையால் 12.5  கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் 1,493 ரூபாய்க்கு வழங்கப்பட்டது. ஆனால் தற்போதைய கொரோனா தொற்றின் மத்தியில் உலக சந்தையில் 1 மெட்றிக் தொன் 651 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. இதற்கமைய கடந்த 6 மாதகாலமாக குறித்த நிறுவனம் சமையல் எரிவாயுவின் விலையை 750 ரூபாயாக அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்து வந்துள்ள நிலையில் அரச கொள்கைகளுக்கு அமைய நடவடிக்கை எடுப்பதற்கான பொறுப்பு தமக்கு வழங்கப்பட்டுள்ளதால் விலை அதிகரிப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

தற்போதைய நிலையில் லாப் சமையல் எரிவாயு சந்தையில் இன்மையால், நுகர்வோர் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளமையை ஏற்றுக்கொள்கிறோம். இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சரவை, நிதியமைச்சு வர்த்தக அமைச்சுடன் இணைந்து, இப்பிரச்சினைக்கு தீர்வை வழங்க தனது அமைச்சும் நுகர்வோர் அதிகாரசபையும் ஒத்துழைப்பு வழங்கும்.