( எம்.எப்.எம்.பஸீர்)
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றிய தலைவர் அமில சந்தீப உள்ளிட்ட நால்வரையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

 இந்த நான்கு பேர் குறித்த வழக்கு விசாரணைகளும் இன்று கடுவலை பதில் நீதிவான் சந்யா தல்துவ முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது சந்தேக நபர்கள் தனிமைப்படுத்தலின் கீழ் உள்ளதால் மன்றில் ஆஜர் செய்யப்படவில்லை என சிறைச்சலை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

கடந்த 3 ஆம் திகதி  தலங்கமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், கொத்தலாவலை சட்ட மூலத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த போது, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும், மஹரகமை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு காயம் ஏற்படுத்தியதாகவும் கூறி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றிய தலைவர் அமில சந்தீப, முன்னிலை சோஷலிசக் கட்சியின் நிர்வாக செயலர் சமீர கொஸ்வத்த மற்றும் கோசலா ஹங்சமாலி ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டிருந்தனர்.  அதன்படி அவர்கள் நால்வரும் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று அவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இதன்போதே அவர்களை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.