(எம்.மனோசித்ரா)
கொவிட் தடுப்பூசி ஏற்றிக் கொண்டதன் பின்னர் பிரசவம் இடம்பெற்ற தாய்மாருக்கும், சேய்க்கும் எவ்வித பாதிப்புக்களோ அல்லது பக்க விளைவுகளோ ஏற்படவில்லை. எனவே எவ்வித அச்சமும் இன்றி இம்மாத இறுதிக்குள் சகல கர்ப்பிணிகளையும் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாக மகப்பேற்று மற்றும் நரம்பியல் விசேட வைத்திய நிபுணர் பிரதீப் டி சில்வா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், இம்மாதம் 24 - 31 ஆம் திகதி வரையான ஒரு வார காலத்தை கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகளை நிறைவு செய்வதற்காக பயன்படுத்திக் கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி பெற்றுக் கொண்டதன் பின்னர் பிரசவத்தின் பின்னர் கூட தாய்க்கும் சேய்க்கும் எவ்வித பாதிப்போ பக்கவிளைவுகளோ ஏற்படாது.

கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த கர்ப்பிணிகளில் பெருமளவானோர் முழுமையாக தடுப்பூசி பெறாதவர்களாவர். அதிஷ்டவசமாக ஒரு தடவையேனும் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட கர்ப்பிணிகள் தொற்றுக்கு உள்ளானாலும் அவர்கள் பாரிய பாதிப்புக்களுக்கு முகங்கொடுக்கவில்லை. எனவே இம்மாத இறுதிக்குள் சகல கர்ப்பிணிகளும் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதால் பெண்கள் அல்லது யுவதிகளுக்கு திருமணத்தின் பின்னர் குழந்தையின்மை ஏற்படுவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை. காரணம் கொவிட் தொற்றுக்கும் கர்ப்பத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. எனவே இவ்விடயத்தில் வீண் அச்சமடையத் தேவையில்லை என்றார்.