(இராஜதுரை ஹஷான்)
படுமோசமான அரசாங்கத்தை உருவாக்குவதற்கு முன்னின்று செயற்பட்டதால்  நரகத்திற்கு செல்ல நேரிடும் என நாட்டுமக்கள் எம்மை விமர்சிக்கிறார்கள். மக்கள் வழங்கிய பெரும்பான்மை பலம் தவறாக செயற்படுத்தப்படுகிறது. அரசாங்கம் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிடின் ராஜபக்ஷர்கள் அனைவரும் வெகுவிரைவில் அரசியலில் இருந்து மக்களால் ஓரங்கட்டப்படுவார்கள். என அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நாங்கள் சொல்வதையும், வழங்கும் ஆலோசனைகளையும் ஆட்சியாளர்கள் கவனத்திற் கொள்வதில்லை. நாடு இன்று பாரிய நெருக்கடியியை எதிர்க் கொண்டுள்ளது. இந்நிலைமை குறித்து ஏற்கனவே அறிவித்துள்ளோம். உரிய இடத்திற்கு பொருத்தமான நபர் சேவையில் அமர்த்தப்படாமை தற்போதைய நெருக்கடிகளுக்கு ஒரு காரணியாகும்.

 கொவிட்  -19 வைரஸ் தொடர்பில் முறையான கொள்கை திட்டம் செயற்படுத்தப்படவில்லை. எல்லை மீறிய அதிகாரங்கள் பலவீனமான ஆட்சியதிகாரத்தை உருவாக்கும் என்று குறிப்பிடப்படுவது இன்று உண்மையாகியுள்ளது. இந்த அரசாங்கத்திற்கு நாட்டு மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பல எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வழங்கினார்கள்.

 பலமான தலைமைத்துவத்தின் கீழ் நாடு நல்லதை நோக்கி பயணிக்கும் என கருதியே மக்கள் பெரும்பான்மை பலத்தை வழங்கினார்கள். ஆனால் இன்று மக்களின் எதிர்பார்ப்பு தகர்த்தப்பட்டு மக்கள் பெரும் சிரமங்களுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள். அதிகாரம் கூடிய பின்னர் தான்தோன்றித்தனம் ஏற்படும் என்பதை தற்போது உணர்ந்துக் கொள்கிறோம் என்றார்.