(இராஜதுரை ஹஷான்)
மரமேறி விழுந்தவனை மாடேறி மிதித்த கதையினை போன்றதாகவே நாட்டு மக்களின் இன்றைய நிலைமை உள்ளது. ஒருபுறம் கொவிட் வைரஸ் தாக்கம் மறுபுறம்  அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதில் தட்டுப்பாடு. வீட்டில் சமைத்து உண்ணவும் முடியாமல், கடையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாமலும் நெருக்கடியான நிலையை மக்கள் எதிர்க்கொண்டுள்ளார்கள்.

நாட்டை  இரண்டு வார காலத்திற்கு மூடுங்கள். என சுகாதார தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், நாட்டை திறந்து  நாட்டு மக்களை கொவிட் வைரஸ் தாக்கத்திற்கு பலி கொடுத்துள்ளதன் பொறுப்பை ஜனாதிபதியும் அவர் தலைமையிலான அமைச்சரவை, மற்றும் கொவிட் தடுப்பு செயலணி பொறுப்பேற்க வேண்டும்.  

நாட்டு மக்களை பாதுகாக்கும் நோக்கில் குறைகளை சுட்டிக்காட்டுகிறோம். மக்களை பலி கொடுத்து அதனூடாக ஆட்சியதிகாரத்தை  கைப்பற்றும் நோக்கம் எமக்கு கிடையாது என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில், தடுப்பூசி செலுத்துதல் மாத்திரம் கொவிட் வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வழிமுறை அல்ல என விசேட வைத்தியர்கள் குறிப்பிடுகின்ற நிலையில்  அரசாங்கம் நாட்டை திறந்து நாட்டு மக்களை ஒன்றுகூட்டி தடுப்பூசி செலுத்தும் பணிகளை முன்னெடுத்து செல்கிறது.

நாட்டு மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்கிறார்கள். பொருளாதாரம் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் மக்களின் கைகளில் பணபுலக்கம் அதிகரித்தது. பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைத்ததுடன் மக்களிடமிருந்து நிதி பறிக்கப்பட்டதே தவிர மக்களுக்கு நிதி வழங்கப்படவில்லை. 2015 ஆம்ஆண்டு அரச சேவையாளர்களின் மாத சம்பளத்தை 10,000 ஆயிரத்திலிருந்து அதிகரித்தோம்.

2020 ஆம் ஆண்டிலிருந்து ஆசிரியர்கள் உட்பட அனைத்து அரச சேவையாளர்களின் சம்பளத்தையும் 2500 ரூபாவிலிருந்து அதிகரிக்க  அனுமதி வழங்கியிருந்தோம். 2020 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியிமைத்திருந்தால், ஆசிரியர்- அதிபர் சேவையில் நிலவும் வேதன பிரச்சினைக்கு நிச்சயம் தீர்வு வழங்கப்பட்டிருக்கும். பொதுஜன பெரமுன ஆட்சியமைப்பதற்கு அரச சேவையாளர்கள் பெருமளவில் ஒத்துழைப்பு வழங்கினார்கள். இன்று  அரச சேவையாளர்களை அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாக்கி வீதிக்கிறக்கியுள்ளது என்றார்.