அல்ஜீரிய தலைநகர் அல்ஜியர்ஸின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 25 இராணுவ வீரர்கள் உட்பட 42 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு பிரதமர் அய்மான் பெனாப்டெர்ரஹ்மானே செவ்வாய்க்கிழமை உறுதிபடுத்தினார்.

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள், தலைநகர் அல்ஜியர்ஸின் கிழக்கே உள்ள கபிலி பிராந்தியத்தின் காடுகளில் உள்ள மரங்கள் மீது தீ கொழுந்து விட்டு எரிவதை வெளிப்படுத்தியுள்ளது.

கிரேக்கம், துருக்கி, சைப்ரஸ், ரஷ்யா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட சமீபத்திய வாரங்களில் பெரும் தீவிபத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்சமயம் அல்ஜீரியாவும் இணைந்துள்ளது.

தீ விபத்தின் மையப்பகுதியான பெஜியா மற்றும் டிஸி ஓசோ பகுதிகளில் மக்களை காப்பாற்ற முயன்றமையினால் 25 வீரர்கள் உயரிழந்துள்ளதாக ஜனாதிபதி அப்தெல்மட்ஜித் உறுதிபடுத்தியுள்ளார்.

இது குறித்து டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள அவர், பெஜியா மற்றும் டிஸி ஓசோ மலைகளில் சுமார் 100 குடிமக்களை தீயில் இருந்து காப்பாற்றியதில் 25 வீரர்கள் வீர மரணம் அடைந்ததை நான் மிகவும் வருத்தத்துடன் அறிந்தேன் என்று கூறினார்.

இராணுவத்தினரின் நடவடிக்கைகளினால் "110 பேர் - ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் தீயில் இருந்து காப்பாற்றப்பட்டதாக" பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.