(எம்.எப்.எம்.பஸீர்)
கைது மற்றும் தடுத்து வைப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில் அசாத்சாலி சார்பில், தன்னையே மனுதாரராக பெயரிட்டு, சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா தாக்கல் செய்துள்ள எஸ்.சி.எப்.ஆர். 97/2021 எனும் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான பரிசீலனைகள் எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த மனு மீதான பரிசீலனைகள் நேற்று உயர் நீதிமன்றில் நீதியர்சர்களான முர்து பெர்ணான்டோ, எஸ். துறைராஜா மற்றும் ஏ.எச்.எம்.டி. நவாஸ் ஆகியோர் முன்னிலையில் வந்தது.  இதன்போது போது, நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் வழக்கை பரிசீலிக்கும் குழாமிலிருந்து விலகுவதாக அறிவித்ததை அடுத்தே இவ்வாறு அம்மனு ஒத்தி வைக்கப்பட்டது.

கடந்த 2021 மார்ச் 9 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளொன்றில், இன, மத குழுக்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தும் விதமாக ஊடக சந்திப்பொன்றினை நடாத்தி வெளியிட்ட கருத்துக்களை மையப்படுத்தி   மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத்சாலிக்கு எதிராக  கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக நேற்று மனு விசாரணைக்கு வந்த போது பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மீண்டும் ஞாபக்கப்படுத்தினார்.  1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டம் மற்றும் 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில், அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டம் ஆகியவற்றின் கீழ்  சட்ட மா அதிபர் சஞ்ஜய் குமார்  ராஜரத்னம் குற்றப் பகிர்வுப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ள நிலையில் அதன் பிரதியொன்றினை மிக விரைவில் உயர் நீதிமன்றுக்கு சமர்ப்பிப்பதாக அவர் குறிப்பிட்டார். நகர்த்தல் பத்திரம் ஊடாக அதற்கு ஒரு வார காலம் அவகாசம் வழங்குமாரறு அவர் கோரினார்.

 அதற்கு நீதிமன்றம் அனுமதித்து மனுவை எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தது.

 இதன்போது மனுதாரர்  சார்பில் சிரேஷ்ட  சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவின் ஆலோசனைக்கு அமைய, ஜனாதிபதி சட்டத்தரணிகளான பயிஸ் முஸ்தபா, மைத்திரி குணரத்ன மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீத் உள்ளிட்ட குழுவினர் ஆஜராகினர்.

கைது மற்றும் தடுத்து வைப்புக்கு எதிராக உயர் நீதிமன்றி கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று அசாத் சாலி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  அசாத் சாலி சார்பில், தன்னையே மனுதாரராக பெயரிட்டு, சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா இம்மனுவை தாக்கல் செய்திருந்தார்.

சட்ட மா அதிபர், பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, சி.ஐ.டி. பணிப்பாளர், சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவு இலக்கம் - 1 இன் பொறுப்பதிகாரி  பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயந்த பயாகல, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர,  குறித்த அமைச்சின் செயலர்  ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரால் ஜகத் அல்விஸ் ஆகியோர் இம்மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது. 

மேல் நீதிமன்ற வழக்கு:
அசாத்சாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபர்  எச்.சி./2778/2021 எனும் இலக்கத்தில் கீழ் வழக்குத் தொடுத்துள்ளார். அதில்  அசாத்சாலிக்கு எதிராக இரு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

 கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் திகதி அல்லது அதனை  அண்மித்த நாளொன்றில்,  கொழும்பு மேல் நீதிமன்ற அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஊடக சந்திப்பொன்றினை நடாத்தி மத, இன பேதங்களை தோற்றுவிக்கும், வன்மத்தை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டதாக கூறி, தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை அசாத்சாலி புரிந்துள்ளதாக முதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

 அத்துடன் இதே சம்பவம் காரணமாக 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில், அரசியல் உரிமைகளுக்கான  சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் 3 (1) ஆம் உறுப்புரையுடன் இணைத்து பர்க்க வேண்டிய 3 (3) ஆம் உறுப்புரையின் கீழ் தண்டனைக் குரிய குற்றம் ஒன்றினை அசாத் சாலி புரிந்துள்ளதாக அவர் மீது முன் வைக்கப்பட்டுள்ள இரண்டாவது குற்றச்சாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இக்குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்காக சட்ட மா அதிபரால் 56 சாட்சியாளர்களின் பெயர் பட்டியல் மேல் நீதிமன்றுக்கு பட்டியலிட்டு கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன்  சான்றுப் பொருட்களாக இறுவெட்டுக்கள், மெமரி சிப் , ஊடக சந்திப்பு பிரதி, கடிதம் ஒன்று ஆகியனவும் சட்ட மா அதிபரால் முன்வைக்கப்பட்டுள்ளன.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு, அச்சட்டத்தின் கீழ் மிக குறுகிய காலத்தில் ( 3 மாதங்கள்) மேல் நீதிமன்றில் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்துள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும். சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு ஊடாக இது சாத்தியப்பட்டுள்ளதுடன், நிர்வாக  தடுப்புக் காவலில் பிரதிவாதி இருக்கும் போதே தாக்கல் செய்யப்பட்ட முதல் குற்றப்பத்திரிகையாகவும் இது கருதப்படுகிறது.